virudhunagar

விருதுநகரில் நகராட்சி அலுவலர்கள் உடன் பணிபுரியும் அலுவலரின் திருமணத்திற்காக சென்றதால் நகராட்சி அலுவலகம் 2வது நாளாக நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

விருதுநகர் நகராட்சி இளநிலை உதவியாளர் ஒருவரின் திருமணம் கோயம்புத்துார் மேட்டுபாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே பலர் விடுமுறை எடுத்து சென்றுவிட்டனர். சிலர் நேற்றும் சென்றுள்ளனர். இதில் சில அலுவலர்கள் திருநெல்வேலியில் நடந்த தணிக்கை கூட்டத்திற்கு சென்றுவிட்டனர். இதை தொடர்ந்து விருதுநகர் நகராட்சி அனைத்து பிரிவுகளிலும் அலுவலர்கள் இல்லை.

கண்துடைப்பிற்கு ஆங்காங்கே சில அலுவலர்கள் மட்டும் இருந்தனர். விடுப்பு எடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் அரசுத்துறையின் உள்ளாட்சி அமைப்பில் செயல்படுவோர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா. நகராட்சி சார்பில் வளர்ச்சி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் ஒரு நாள் முழுவதும் ஒரு நிர்வாகமே விடுப்பு எடுத்ததால் நிர்வாக பணியில் தொய்வு ஏற்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.மொத்த விடுப்பில் சென்ற அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை இல்லை

நகராட்சியில் சாதாரண பணியை முடிப்பதற்கே பல ஆண்டுகளாக்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் பாதாளசாக்கடை தான். இது போன்ற மொத்த விடுப்புகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை தான் ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் நகராட்சிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.

– முனியசாமி, தனியார் ஊழியர், விருதுநகர்.

சிரமப்படுவது மக்கள்தானே

சான்றுகள் பதிவு செய்ய முடியாமல் பலர் பரிதவிப்பில் சிக்கினர். தணிக்கை கூட்டம் இருப்பது தெரிந்தும் பிற அலுவலர்கள் விடுப்பில் சென்றதால் நகராட்சி அலுவலகத்திற்கு மட்டும் ஏதோ அரசு விடுமுறை விட்டது போல இருந்தது. அலுவலர்கள் இன்றி வெறிச்சோடிய நகராட்சியால் பொதுமக்கள்தான் சிரமப்பட்டனர்.

– பாலுசாமி, கூலித்தொழிலாளி, விருதுநகர்.

Related posts

Leave a Comment