ஸ்ரீவி.,யிலிருந்து இல்லை நேரடி பஸ்கள்; பல ஆண்டுகளாக தொடரும் பரிதவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ் டிப்போ இருந்தும் மதுரை, விருதுநகர் மற்றும் தேனிக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டபொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலர்கள்மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மதுரை – செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் தங்களின் வேலை, கல்வி, வியாபாரம் காரணமாக மதுரை, விருதுநகர், தேனிக்கு பயணித்து வருகின்றனர். ஆன்மிக ரீதியாக ஆண்டாள் கோயிலுக்கு வரும்பக்தர்களும், மருந்து, எலெக்ட்ரிகல் உட்பட பல்வேறு தொழிலில் ஈடுபடும் வெளியூர்வியாபாரிகளும் அதிகளவில் ஸ்ரீவில்லிபுத்துார் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு தினமும் பயணம் மேற்கொள்ளும் இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து செல்ல மிகுந்த சிரமத்தை தினமும் சந்தித்து வருகின்றனர். காலை, மாலை, வார விடுமுறை, பண்டிகை நாட்களிலும் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தான் பயணிக்க வேண்டியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இதேநிலை நீடித்து வருகிறது.செங்கோட்டையிலிருந்து வரும் பஸ்களில், ராஜபாளையத்தில் சீட்டுகள் நிரம்பி விடுவதால் ஸ்ரீவில்லிபுத்துார் பயணிகள் நின்று கொண்டுதான் பயணிக்கின்றனர்.

கிருஷ்ணன்கோவில், நத்தம்பட்டி, அழகாபுரி பகுதி மக்கள் படியில் தொங்கி கொண்டு தான் பீக் ஹவர்சில் பயணிக்கின்றனர். விருதுநகரிலிருந்து மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாவிற்கும் நேரடி பஸ்கள் இயக்கப்படும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு மட்டும் நேரடி பஸ் வசதி இல்லை. இதேநிலை தான் தேனிக்கும் நீடிக்கிறது. நாளுக்குநாள் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து நேரடி பஸ்கள் இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஒருமணிநேர வேதனை

தொழில் ரீதியாக ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து திருமங்கலத்திற்கு தினமும் பயணித்து வருகிறேன். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நின்று கொண்டே பயணிக்கவேண்டியுள்ளது. ஒருமணி நேரமாக குழந்தைகள், கர்ப்பிணிகள் படும் சிரமங்கள் வேதனைக்குரியது. ஸ்ரீவில்லிபுத்துார் – திருமங்கலம் இடையே நேரடி பஸ் இயக்கினால் மக்கள் பயனடைவர்.

-ராஜ்குமார், தொழில்முனைவோர், ஸ்ரீவில்லிபுத்துார்.

Related posts

Leave a Comment