#DelhiElection #PrashantKishor #AamAadmi

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: பிரசாந்தின் ஐடியாவால் கெஜ்ரிக்கு கிடைத்த வெற்றி 

புதுடில்லி: நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சிக்கு ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோர், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியதாகவும், அவ்வாறு செய்ததாலேயே அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி 62 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அக்கட்சிக்கு ஆலோசனை வழங்கிய இந்திய அரசியல் நடவடிக்கை குழு (ஐபாக்) தலைவர் பிரசாந்த் கிஷோர் தான். அவரின் ஆலோசனையையே ஆம்ஆத்மி பின்பற்றி வந்தது. டில்லியில் ஆட்சியை தக்கவைக்க முதல்வர் கெஜ்ரிவாலிடம், 2015ல் அளித்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுமாறு பிரசாந்த் அறிவுறுத்தினார்.

அதனாலேயே, 2015ல் நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி அளித்த வாக்குறுதிகளான இலவச வைபை, பெண்களுக்கு இலவச பஸ் மற்றும் மெட்ரோ வசதி, நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல், இலவச தண்ணீர் போன்ற அடுக்கடுக்கான திட்டங்களை ராக்கெட் வேகத்தில் செயல்படுத்தியது. மேலும், தேர்தலுக்காக கடந்த ஜன.,19ம் தேதி, ’10 பாயிண்ட் கேரண்டி கார்டு’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இது பெரிதும் பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் பாஜ.,வை விமர்சிக்க வேண்டாம் என்றும், பிரசாரம் முழுவதும் டில்லியை மையமாக வைத்தே இருக்க வேண்டும் எனவும், ஆம்ஆத்மி கட்சியினரிடம் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார். அதன் காரணமாகவே, பிரசாரத்தில் பிரதமர் மோடியை, கெஜ்ரிவால் தாக்கி பேசவில்லை எனக்கூறப்படுகிறது.

மேலும், கெஜ்ரிவால் கோயில் பயணத்தை மேற்கொள்ளும்போது பாஜ.,வினர் அதை விமர்சிப்பார்கள் எனவும், அது பாஜ.,வுக்கு தான் எதிர்மறையாக அமையும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த ஆலோசனைகள் அனைத்தையும் அப்படியே பின்பற்றிய ஆம்ஆத்மி 3வது முறையாக டில்லியில் ஆட்சி பொறுப்பேற்க உள்ளது.

Related posts

Leave a Comment