14 வயதிலே கராத்தே பயிற்சியாளர்

அருப்புக்கோட்டை:பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டுள்ள மாணவர்கள் பலர் அதை வெளிப்படுத்த தெரியாமலேயே தன்னுள் புதைத்து கொள்கின்றனர்.

சரியான நேரத்தில் அவற்றை வெளிப்படுவது மூலம் மாணவன் சிறந்து விளங்குகிறான். பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கிறான். அந்தவகையில் அருப்புக்கோட்டை திருநகரம் பொன்னுச்சாமிதெருவை சேர்ந்த நெசவாளி மகனான ஹரிஹர பிரசாத் 14, சாலியர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவனுக்கு தற்காப்பு கலையை கற்று கொள்வதில் ஆர்வம் அதிகம். அதுவும் கராத்தே என்றாலே அதிக ஆர்வம். வீட்டில் இருக்கும் போது தானாகவே தனக்கு தெரிந்த முறைகளில் கராத்தே பயிற்சி செய்தார். மகனின் ஆர்வத்தை அறிந்த தந்தை முறைப்படி கராத்தே கற்றுகொள்ள ‘யாசுகான் கராத்தே பள்ளி’ யில் சேர்த்தார். கட்டாஸ், குமுத்தே பிரிவில் சிறந்து விளங்கியதோடு ‘பிளாக் பெல்ட்’ வாங்கினார்.

மதுரை, சிவகங்கை, கோவில்பட்டி உட்பட பல ஊர்களில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை வென்றுள்ளார். மாணவனின் திறமையை அறிந்து கராத்தே பள்ளியோ, இவருக்கு மற்றவர்களுக்கு கற்று கொடுக்கும் பயிற்சியாளர் அங்கீகாரத்தை வழங்கி உள்ளனர். மாநில மற்றும் உலக அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கு கொள்ள கடுமையான பயிற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் ஹரிஹர பிரசாத்.

மாணவரை 95781 96761ல் வாழ்த்தலாம்.

Related posts

Leave a Comment