விமர்சனம்:கன்னி மாடம்

இயக்கம்: போஸ் வெங்கட் ஆணவக் கொலைகளுக்கு அரிவாள் தீட்டும் அப்பாவுக்கு மகன் சொல்கிற வன்முறை பாடம்தான், கன்னி மாடம்.

சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஶ்ரீராமும் முருகதாஸும் உறவினர்கள். ஊரில் வசதியாக வாழ்ந்த இவர்கள் இங்கு ஆட்டோ ஓட்டுவதற்கு பின்னணியில், பிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் அதிகாலையில் ஶ்ரீராமின் ஆட்டோவில் ஏறுகிறார்கள், ஊரை விட்டுச் சென்னை வரும் காதல் ஜோடி விஷ்ணுவும் சாயாதேவியும். இருவரும் ஶ்ரீராம், முருகதாஸ் வீட்டின் அருகிலே குடி வருகிறார்கள். இதற்கிடையில், பணக்கார விஷ்ணுவை தேடி அவரது தாய்மாமாவும் அவர் ஆட்களும் சென்னை வருகிறார்கள். சாயாதேவியை கொன்று விட்டு, விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம்.

இதற்கிடையில் விபத்து ஒன்றில் விஷ்ணு பலியாக, தனியாக தவிக்கும் சாயாதேவி கர்ப்பமாக இருக்கிறார். யாரும் தெரியாத ஊரில் அனாதையாக நிற்கும் அவரை வாடகை வீட்டில் தங்க வைக்கிறார் ஶ்ரீராம். திருமணமாகாத அவர் சாயாதேவிக்கு கணவராக, நடிக்க வேண்டிய நிலை. இதற்கிடையே சாதி வெறியால் சிறைக்குச் சென்றுவிட்டு பரோலில் வருகிறார் ஶ்ரீராமின் அப்பா. அடுத்து என்ன நடக்கிறது என்பது அதிர்ச்சி கிளைமாக்ஸ்! நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராகி இருக்கும் படம். முதல் படத்திலேயே சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையை எடுத்து, அதை நேர்த்தியாகச் சொல்ல முயன்றதற்காக அவரை பாராட்டலாம்.

ஹீரோ ஶ்ரீராமுக்கு, உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை முகத்தில் காட்டும் கேரக்டர். அதை கச்சிதமாகவே செய்கிறார். காதலர்கள் என தெரிந்ததும் உதவுவது, தனியாகிவிட்ட சாயாதேவிக்காக மனிதாபிமானத்தோடு வீடு எடுத்துக்கொடுப்பது, தன்னைக் காதலிக்கும் வலினாவின் உணர்வை புரிந்துகொண்டு தவிர்ப்பது என அமைதியாகவே நடித்து, கடக்கிறார். வலுவான கேரக்டர் சாயாதேவிக்கு. அவருக்கு இதுதான் முதல் படம் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். முதிர்ச்சியான நடிப்பு. தமிழில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது. ஆடுகளம் முருகதாஸ் காமெடி ஏரியாவை கவனித்துக் கொள்கிறார். சில இடங்களில் அவரது காமெடிக்கு அள்ளுக்கிறது அப்ளாஸ். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, கவுன்சிலராகவும் ஹவுஸ் ஓனராகவும் வந்து கலக்குகிறார். அவரது மிரட்டலும் உருட்டலும் அசத்தல்.

முதல் பாதியில் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஷ்ணு. நடிப்பு ஆசையில் இருக்கும் சூப்பர்குட் சுப்பிரமணி, ஆட்டோ டிரைவராக வந்து காதலை, மனதுக்குள் புதைக்கும் வலினா, சாதிவெறியுடன் அலையும் கஜராஜ் என அனைவரும் கச்சிதமான தேர்வு. ஹரி சாயின் பின்னணி இசையும் ஹரிஷ் ஜெ இனியனின் ஒளிப்பதிவும் கதையோடு பயணிக்க உதவுகிறது. சாதிவெறி கொடுமையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த கிளைமாக்ஸ் அதிர்ச்சி கொடுக்கிறது. கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம் என்பது போன்ற குறைகள் இருந்தாலும் இயக்குனருக்கு முதல் படம் என்பதால் அதை விட்டுவிடலாம். ஏனென்றால், சாதி வெறிகளுக்கு எதிரான எத்தனை படம் எடுத்தாலும் அத்தனையும் தேவையாகத்தானே இருக்கிறது.

Related posts

Leave a Comment