நான்கு, ஆறு வழிச்சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க அரசு வழி காணுமா?

நரிக்குடி : நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் பெரும்பாலும் சென்டர் மீடியனால் நடக்கிறது. டயர் வெடித்து எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க சென்டர் மீடியனில் உள்ள சுவற்றின் உயரத்தை உயர்த்தினால், பெருமளவிலான விபத்துக்கள் நடப்பதை தவிர்க்க முடியும்.

மாவட்டத்தில், வாகனங்கள் பெருகி வரும் சூழ்நிலையில் அதற்கு ஏற்ற வகையிலான ரோடு அமைப்புகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலான ரோடுகள் சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள கட்டமைப்பின்படி வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்ல முடியாத வகையில் சென்டர் மீடியன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்திசையில் வரும் வாகனங்கள் தொந்தரவில்லாமல் செல்ல வசதி செய்தபோதும், டயர் வெடித்தும், அதிவேகமாக வரும் வாகனங்களும் பெரும்பாலும் சென்டர் மீடியனில் உள்ள சுவற்றில் உரசி விபத்துக்குள்ளாகின்றன.

என்னதான் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து சென்றாலும் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முடியாமல் போகிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் விபத்துக்குள்ளாகும் பெரும்பாலான வாகனங்கள் சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துவது தான். சமீபத்தில் திருப்பூர் அவிநாசியில் நடந்த கோர விபத்தில் 19 பேர் பலியாயினர்.

இதற்கு முக்கிய காரணம் சென்டர் மீடியனின் கட்டமைப்பு சரியாக இல்லாததே என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள சாலைகளில் சென்டர் மீடியனில் உள்ள சுவற்றை உயரமாக அமைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும்பாலும் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. அதுபோன்ற கட்டமைப்புகளை நமது நாட்டிலும் செயல்படுத்தினால், அடிக்கடி நடக்கும் கோர விபத்துக்களை தவிர்க்க வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related posts

Leave a Comment