வளர்ந்தால்தான் தெரிகிறது மரங்களின் அருமை…

இன்றைய அறிவியல் உலகில் மாசுக்கள் அதிகரித்து, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே தெருக்களின் இருபுறமும், மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, இன்று அவற்றின் நிழலில் இருந்து, இயற்கை காற்றை சுவாசித்து தங்களது கைத்தறி நெசவு தொழிலை செய்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி நெசவாளர்கள்.

நவீன தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இன்றைய இளைஞர்கள் குளிரூட்டபட்ட அறைகள் அமைந்துள்ள அலுவலகங்களில் பல மணிநேரம் இருந்து பணியாற்றுகின்றனர்.

அவ்வாறான இளைஞர்கள் நடைமுறை வாழ்க்கையில் சிறிய வெயிலைக்கூட தாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர்.

பல்வேறு சுவாசக்கோளாறு நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

ஆனால், இயற்கையின் அருட்கொடையாய் விளங்கும் மரங்களின் நிழலில் இருந்து பணியாற்றுவது உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது.

அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பகுதியில் மாரியம்மன் கோயில் கிழக்கு மற்றும் மேற்கு தெருக்கள், ஊரணிபட்டி, மடத்துப்பட்டி, முதலியார்பட்டி ஆகிய நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதன் நிழலில் அமர்ந்து நெசவாளர்கள் ராட்டை சுற்றுதல் மற்றும் கைத்தறி வேலைகளை தனியாகவும், குழுவாகவும் இருந்து செய்யும்போது மரங்களின் மாசில்லாகாற்றை சுவாசிக்கின்றனர்.

ஆனால், இன்றும் ஸ்ரீவில்லிபுத்துாரில் பல்வேறு தெருக்களில் போதிய மரங்கள் இல்லாதநிலை காணப்படுகிறது. அத்தகைய தெருக்களில் நடப்பதற்கும், வீடுகளில் வசிப்பதற்கும், வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தவிர்க்க, நகரின் ஒவ்வொரு தெருக்களிலும் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால், மரங்கள் நிறைந்த தெருக்களும், மாசில்லா காற்றும், மாசில்லா நகரமும் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

Related posts

Leave a Comment