என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா

நியூயார்க் : பிரபல ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2004இல் தன் பதின் பருவ வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலகை அதிர வைத்தவர் தான் மரியா ஷரபோவா.

சில ஆண்டுகளுக்கு முன் பார்மை இழந்தார். பல முறை காயம் காரணமாக சரியாக ஆட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். 2016இல் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். பின் மீண்டும் டென்னிஸ் ஆடி வந்த மரியா ஷரபோவா, தற்போது தன் 32 வயதில் யாரும் எதிர்பாராத நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 1994 முதல் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த ரஷ்ய பெண்ணான மரியா ஷரபோவா, டென்னிஸ் அரங்கில் ரஷ்ய நாட்டு வீராங்கனையாக பங்கேற்றார். 2004இல் விம்பிள்டனில், அப்போது உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி உலகை அதிர வைத்தார். தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றார். அப்போது முதல் நல்ல பார்மில் இருந்த அவர், ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனையாக பல ஆண்டுகளுக்கு வலம் வந்தார். 2012 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இடையே காயம் காரணமாக அவரது விளையாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டது. அதில் இருந்து மீள முடியாமல் அவர் தவித்து வந்த நிலையில், 2016இல் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். அதன் பின் டென்னிஸ் களத்துக்கு வந்த மரியா ஷரபோவா தன் முந்தைய வீரியமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். மீண்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வேன் என உறுதியாக பேட்டி அளித்தாலும், அவரால் களத்தில் அதை செயல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், வோக் அன்ட் வேனிட்டி ஃபேர் என்ற பத்திரிக்கையில் எழுதி இருக்கும் கட்டுரையில், “டென்னிஸ்-க்கு குட்பை” கூறி ஓய்வை அறிவித்துள்ளார். “நான் இதற்கு புதிது. எனவே, என்னை தயவு செய்து மன்னியுங்கள். டென்னிஸ் – உனக்கு குட்பை சொல்லிக் கொள்கிறேன்” என தன் கட்டுரையில் கூறி ஓய்வை அறிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment