உடைந்த குடிநீர் குழாய்; சீரமைப்பு தாமதத்தால் அவதி

சாத்துார்:சாத்துார் கீழக்காந்திநகரில் உடைந்த குடிநீர் குழாயை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் தாமதம் செய்வதால் கடந்த 20 நாட்களாக பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிக்குள்ளாகின்றனர்.

கீழக் காந்தி நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் விரிவாக்க பணிகள் நடந்துவருகிறது. இதற்காக மேன்ஹோல், குழாய் பதிக்க மண் அள்ளும் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதில் வீடு, பொது குடிநீர் குழாய் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. பொதுவாக பாதாள சாக்கடை பணி நடக்கும் போது இது போன்று குடிநீர் குழாய் உடைந்தால் ஓரிரு நாட்களில் பாதாள சாக்கடை பணியை மேற் கொள்ளும் ஒப்பந்தாரர்களே உடைப்பை சரி செய்வது வழக்கம்.

ஆனால் கீழக் காந்திநகரில் 20 நாட்களுக்கு மேலாகியும் குழாய் உடைப்பு சரி செய்யாத நிலையில் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

முன்னாள் கவுன்சிலர் மோகன் கூறியதாவது: 20 நாட்களாகி உடைப்பை சரி செய்யவில்லை. ஒப்பந்தாரரிடமும், நகராட்சி பொறியாளரிடம் புகார் செய்துவிட்டோம். நேரில் பார்த்து சென்றும் உடைப்பை சரி செய்யவில்லை. குடிநீர் வினியோகம் செய்யும் போது வீடுகளுக்கு சென்றடையாமல் பள்ளத்தில் தேங்குகிறது.

ஒப்பந்ததாரர், நகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தால் மக்கள்தான் அவதிப்படுகின்றனர், என்றார்.

மேஜர் என்பதால் தாமதம்

ஒப்பந்ததாரர் பணியாட்களுடன் நகராட்சி பணியாளர்களும் இணைந்து குழாய் உடைப்புகளை சரி செய்து வருகிறோம். 80 சதவீத பணிகள் முடிந்து விட்டது. 2 நாளில் சரி செய்து குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும்.

Related posts

Leave a Comment