‘கொரோனா’வால் இடம் பெயர்ந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்: ‘ஐ.டி., பார்க்’ ஆகும் தேனி கிராமங்கள்

தேவாரம் : ‘கொரோனா’ தாக்கத்தால் பெங்களூரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தேனி கிராமத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது.

‘கொரோனா’ இந்தியாவில் தொழில்களை நசுக்கி வருகிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு ஐ.டி., நிறுவனங்களும் விதி விலக்கல்ல. ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் ‘கொரோனா’வுக்கு பயந்து பெங்களூருவை சேர்ந்த ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனம் இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 பணியாளர்களுடன் செயல்படுகிறது.

தேனி மாவட்டம் தேவாரம் டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த அரவிந்த், அமெரிக்காவை சேர்ந்த கேப்ரியல் ஆப்பிள்டன் இணைந்து ‘இன்ஸ்டாகிளீன்’ என்ற ‘ஆண்ட்ராய்டு’ ஐ.ஓ.எஸ்., செயலியை உருவாக்கும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனத்தை பெங்களூருவில் நடத்துகிறார். 20 பேர் வேலை பார்க்கும் இந்த நிறுவனத்தின் செயலியை 7 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ‘கொரோனா’வின் தாக்கத்தால் இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டது. ஊழியர்கள் அலுவலகம் வர அச்சமடைந்ததால் கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டை அலுவலகமாக்க நிறுவன பங்குதாரர் அரவிந்த் முடிவு செய்தார். இதற்கு ஊழியர்களும் சம்மதித்தனர். அதன்படி 12 பேர் கொண்ட ‘டீம்’ தோட்டத்தை அலுவலகமாக மாற்றி முழுவீச்சில் பணியாற்றுகிறது.

இதுபற்றி அரவிந்த் கூறுகையில், ”அதிக செலவு ஏற்படுத்தும் பெருநகரங்களை தவிர்த்து கிராமங்களில் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனத்தை துவக்க வேண்டுமென்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது. ‘கொரோனோ’ தாக்கத்தால் பெருநகரங்கள் முடங்குவதை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்தோம். தேவாரம், அனுமந்தன்பட்டியில் உள்ள எங்கள் பண்ணை வீடுகளை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறோம். இங்கு இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட வெவ்வேறு கலாசாரம் கொண்ட 12 பேர் வேலை பார்க்கிறோம்.

வாழ்வியல் முறைக்கு சம்மந்தமில்லாத பணி நேரத்திலிருந்து தற்போது விடுதலை கிடைத்துள்ளது. காலை 7:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வேலை பார்க்கிறோம். அதன் பின் மலையேற்றம், நீச்சல் என்று உற்சாகமாக நேரத்தை கழிக்கிறோம். இதனால் புத்துணர்ச்சி அதிகரித்து வேலையின் தரம் உயர்ந்துள்ளது. எங்கள் செயல்பாடு சிறப்பாக செல்வதை அறிந்த வேறு நிறுவனங்கள், தங்களுக்கும் இதே போன்ற பணி சூழலை ஏற்படுத்தி தர முடியுமா என்று கேட்டுள்ளனர். இதனால் கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு பணி தேடி சென்ற நிலை மாறி கிராமங்கள் ‘ஐ.டி., பார்க்’ ஆக மாறும் சூழல் உருவாகியுள்ளது” என்றார்.

Related posts

Leave a Comment