டெண்டர் விட்டு 3 மாதமாச்சு ரோடு பணிகளை காணோம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பணிகள் நடக்கவில்லை.

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி – ராமசாமிபுரம் ரோடு ஒன்றரை கி.மீ., வரை உள்ளது. இந்த ரோடு கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திபட்டி, ஜெயராம் நகர், கணேஷ் நகர் உட்பட பகுதிகளிலிருந்து நகருக்குள் செல்லாமல் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், நகராட்சி, கருவூலம், பள்ளிகள், கல்லுாரிகள், வங்கிகளுக்கு செல்ல வசதியாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக ரோடு அமைக்காததால் கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக நடக்க முடியாத அளவிற்கு உள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சைக்கிள்கள் ‘டயர்’ பஞ்சர் ஆகி விடுகிறது. இதனால் 2 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. நகரில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பணிகள் தாமதப்படுகிறது.ரோட்டை புதியதாக அமைத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையவும் வாய்ப்புள்ளது.

ரோட்டை புதியதாக அமைக்க கோரி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தததால் 14 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் கஞ்சநாயக்கன்பட்டி – ராமசாமிபுரம் ரோடு, கட்டகஞ்சம்பட்டி ரோடு, ஆத்திபட்டி ஆகிய 3 ரோடுகளுக்கு ‘பேக்கேஜ்’ முறையில் சபரமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. மாதங்கள் கடந்து விட்டதே தவிர பணிகள் எதுவும் நடக்க வில்லை.பணிகளை விரைவில் துவங்க அறிவுறுத்தாமல் ஒன்றிய அலுவலக அதிகாரிகளும் மெத்தனத்தில் உள்ளனர். இதன் பணிகளை துவக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

Related posts

Leave a Comment