இதற்கு ஓர் வழி காணுங்க

சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் பல காம்பவுண்ட் இன்றி கட்டப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் பல மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டடங்களும் கட்டித் தரப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மடிக்கணினி விலையில்லா சைக்கிள் போன்ற பொருட்கள் பள்ளி வகுப்பறையில் வைக்கப்படுகின்றன. இவற்றை சமூக விரோதிகள் திருடி செல்வதும் சேதப்படுத்தவும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சிலர் பள்ளி கட்டடத்தில் அமர்ந்து மது குடிப்பதுடன் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் விட்டு செல்லும் மது பாட்டில்கள், புகையிலை கழிவுகளை பார்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் வேதனையுடன் அகற்றும் நிலை உள்ளது. கண்ணாடி ஜன்னல்கள், மேஜைகளை சேதப்படுத்துகின்றனர். உடைந்த கண்ணாடி பொருட்களால் மாணவர்கள் காயமடையும் சம்பவங்களும் நடக்கிறது. கிராமபுறங்களில் பகல் நேரத்தில் கூட போதை ஆசாமிகள் பள்ளி வளாகத்தில் படுத்து உருளுகின்றனர். இந்நேரங்களில் ஆசிரியைகள், மாணவிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. காம்பவுண்ட் சுவர் இல்லாத பள்ளிகளுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டுவதுடன் காவலாளியையும் நியமிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துமீறல்கள் குறையும்அரசு பள்ளிகள் பல ஊருக்கு வெளியே கட்டப்பட்டுள்ளன. இங்கு காம்பவுண்ட் சுவர் இல்லாத தால் ஆடு,மாடு மேய்ப்பவர்கள், மதுபிரியர்கள் நுழைகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் கவனம் சிதறுவதுடன் கல்வியும் பாதிக்கிறது. பல பள்ளிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து விடுகின்றன. மாணவர்கள் விரட்டுகின்றனர். வெறிபிடித்த நாய்கள் மாணவர்களை கடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. தனியார் பள்ளிகள் போன்று காம்பவுண்ட் சுவர் அமைத்து காவலாளியை நியமிப்பதன் மூலம் இது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் குறையும். மாணவர்கள், ஆசிரியர்கள் மன நிம்மதி அடைவார்கள்.- கணேசன், புகைப்படக் கலைஞர், சாத்துார்.

Related posts

Leave a Comment