பற்றாக்குறையில் போலீஸ் சிறப்பு பிரிவுகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.சி.ஐ.டி., லஞ்சஒழிப்புதுறை, கியூபிராஞ்ச் உட்படபல்வேறு சிறப்பு பிரிவு போலீசில் போதியளவிற்கு போலீசார் இல்லாமல் பற்றாக்குறை நிலவுவதால் குற்றங்கள் அதிகரிக்கிறது.

மாவட்டத்தில் வழக்கமான சட்டம் ஒழுங்கு போலீசார் மட்டுமின்றி நடக்க உள்ள குற்றங்களை முன்கூட்டியே கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார், முக்கிய வழக்குகளை கையாளும் சி.பி.சி.ஐ.டி., அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சங்களை தடுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ், வெடிபொருட்கள் மற்றும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் கியூபிராஞ்ச், திருட்டு சம்பவங்களை விசாரிக்கும் கிரைம்பிரிவு என பல்வேறு பிரிவுகள் போலீசில் செயல்பட்டு வருகிறது.இத்துறையினரின் சரியான செயல்பாட்டில் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இத்துறையில் போதியளவிற்கு போலீசார் இல்லாமலும், காலிப்பணியிடங்கள் நிவர்த்தி செய்யபடாமலும் இருப்பதால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் கண்டறியபட்ட குற்ற வழக்குகளை தொடர்ந்து நடத்தமுடியாமலும் போலீசார் தவித்து வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி.,பிரிவில் மிகவும் குறைந்த அளவிற்கே போலீசார் இருக்கின்றனர்.எஸ்.பி.சி.ஐ.டி., இவர்களும் நிர்மலாதேவி உட்பட ஒருசில வழக்குகளில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பணியாற்றுகின்றனர். இதனால் சில வழக்குகள் மிகுந்த காலதாமத்தில் நடக்கிறது.எஸ்.பி.சி.ஐ.டி.,பிரிவில் போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. ஓய்வு பெற்றவர்கள் பணியிடங்கள் நிரப்பபடாததால் தற்போது இருப்பவர்கள் மிகுந்த பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு ஸ்டேஷன்களுக்கும் ஒரு எஸ்.பி.,ஏட்டு இருக்கும்நிலையில் எஸ்.பி.சி.ஐ.டி.,பிரிவிலோ ஒருவர் குறைந்தபட்சம் 4 ஸ்டேஷன் அளவிற்கு பணி செய்கின்றனர். இதனால் அரசுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து விவரங்களை திரட்டுவதில் திணறி வருகின்றனர்.லஞ்ச ஒழிப்பு துறையில்தற்போது மிகவும் குறைந்தளவே போலீசார் இருப்பதால் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் சர்ப்ரைஸ் ஆய்வு நடத்துவதில்லை. அதிலும் டி.எஸ்.பி.,பணியிடம் பலமாதங்களாக காலியாக இருப்பதால் முக்கிய வழக்குகளை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.கியூ பிராஞ்ச் துறையில் தேவையானளவிற்கு போலீசார் இல்லாததால் மாவட்டத்தில் மேற்கு பகுதிகளில் வெடிகுண்டுகள் தயாரிப்பு, நாட்டுவெடிகுண்டுகள் தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் தொடர்கதையாகி வருகிறது. இருக்கும் போலீசாரும் மாவோயிஸ்ட் வழக்கு விசாரணையில் கவனம் செலுத்துவதால் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கமுடியவில்லை.ஆண்டாள் கோயில்மாவட்டத்தில் இரண்டாம் தலைநகராக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த ஒராண்டுக்குமேலாக குற்றப்பிரிவிற்கு என தனி இன்ஸ்பெக்டர் இல்லை. இருக்கும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரே 4 ஸ்டேஷன்களை கண்காணிக்கும்நிலையில் நீதிமன்றம், ஆண்டாள்கோயில் என வி.ஐ.பி.,க்கள் வரும் இடங்களிலும் பணியாற்றி குற்றபிரிவையும் கண்காணித்து வருகிறார். இதனால் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் இதுவரை திருடர்கள் பிடிபடாமல் திருட்டும் ஒரு தொடர்தையாகவே நீடிக்கிறது.வழக்குகளில் தாமதம்இதுதவிர உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு, முன்னாள் குற்றவாளிகள் கண்காணிப்பு, ரவுடிகள் மற்றும் பழங்குற்றவாளிகள் கண்காணிப்பு உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளிலும் போதியளவிற்கு போலீசார் இல்லை. இதனால் மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு உரிய போலீஸ் அதிகாரிகள் ஆஜராகாமல் வழக்குகள் நடத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதில் காலதாமதமின்றி செயல்பட்டு அனைத்து பிரிவுகளிலும் போதிய போலீசார்களை நியமிப்பது அவசியமாகிறது.

Related posts

Leave a Comment