விழிப்புடன் இருப்போம்: கமல்

சென்னை: ‘நோய் தொற்று பரவாமல் இருக்க, விழிப்புடன் இருப்போம்’ என, நடிகர் கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் அறிக்கை: எட்டு வாரங்களாக உலகையே உலுக்கி வரும், ‘கொரோனா’ வைரஸ் மூன்று வாரங்களாக, இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இதுவரை, பாதித்தோரின் எண்ணிக்கை, 105 தான் என்றாலும், அடுத்து வர உள்ள, இரண்டு வாரங்கள் மிக முக்கியமானவை. இத்தாலி, சீனா, ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகளில், பாதித்தோரின் எண்ணிக்கை, நான்கு மற்றும் ஐந்தாவது வாரத்தில் இருந்து, ஆறு முதல், பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், இதுபோல் இந்தியாவிலும் நடக்காமல் தடுக்க முடியும். தமிழக அரசு, அனைத்து மருத்துவர் மற்றும் மருத்துவமனைகளோடு இணைந்து செயல்பட வேண்டும். யாருக்காவது, வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருப்பின், உறுதிப்படுத்தும் பரிசோதனைக்கு, அரசு மருத்துவமனைக்கு மட்டும் அனுப்புவது என்ற நடைமுறை, நோய் தொற்று இல்லாதவருக்கும், வைரஸ் பரவ வாய்ப்பு உருவாக்கும்.

உறுதிப்படுத்தும் பணி விரைந்து நடந்தால் தான், உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து, பரவாமல் தடுப்பது சாத்தியமாகும். அதற்கு, அரசு தற்போது உபயோகப்படுத்தும், நான்கு பரிசோதனை மையங்கள் மட்டும் போதாது. ஒரே நேரத்தில், அதிக பேருக்கு, ரத்த மாதிரி பரிசோதனை வாயிலாக, நோய் தொற்றை கண்டறியும் சாதனத்தை தயாராக வைத்திருப்பது, மிக அவசியம்.

தனி மனித சுகாதாரம் மற்றும் கண்டறியும் வழிமுறைகள் துரிதமாகவும், பரவலாகவும் இருந்தால், வைரஸ் தொற்றை முறியடிக்கலாம்; அனைவரும் விழிப்புடன் இருப்போம். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment