வெளிமாவட்ட வாகனம், பஸ்களில் கிருமி நாசினி: கொரோனா ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

விருதுநகர்: வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், பஸ்களை கண்காணித்து கிருமி நாசினி தெளிக்க விருதுநகர் கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகரில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமியாகும். இது தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களில் நோய் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு கிருமி நாசினி கொண்டு துாய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பங்குனி திருவிழா நடக்க உள்ளது. வெளிமாவட்டம், மாநிலத்திலிருந்து மக்கள் வரக்கூடும். இவ்விழாக்களில் தனி கவனம் செலுத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைஸ் பரவாமல் தடுப்பதற்கான முறைகள் குறித்தும் கைகளை சுத்தமாக கழுவும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தவிர சுற்றுலா பயணிகள் வந்து செல்ல கூடிய இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள், பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இருமல், தும்மல் ஏற்படும் போது மாஸ்க், கைக்குட்டைகள் பயன்படுத்துவதன் மூலம் நோய்தொற்றை முடிந்தளவு கட்டுப்படுத்தலாம். இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் பதற்றமடையாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 94443 40496, 87544 48477 என்ற அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். வைரஸ் தொடர்பாக சமுகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல் மருத்துவரை அணுக வேண்டும், என்றார். எஸ்.பி., பெருமாள், சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரகலாதன், மருத்துவக்கல்லுாரி டீன் ரேவதி, ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.கொல்லம் ரயில் தினமும் கண்காணிப்புகலெக்டர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜபாளையம் ஒட்டிய பகுதி கேரள எல்லை என்பதால் அங்கு கூடுதல் கண்காணிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு, குறிப்பாக கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பஸ், ரயில்வே ஸ்டேஷன்களில் கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொல்லம் ரயில் ராஜபாளையத்துக்குள் நுழையும் போது கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும், என்றார்.

Related posts

Leave a Comment