வழிகாணுமா அரசு! அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பாழடைந்த கட்டடங்கள்

நரிக்குடி : மாவட்டத்தில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்பாடின்றி, பாழடைந்த கட்டடங்கள் உள்ளன. விபரீதம் உணராமல் விளையாடும் சிறுவர்களுக்கு ஆபத்தான சூழ்நிலை இருப்பதால், பாழடைந்த கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்தகாலத்தில் அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் ஓட்டு கட்டடங்களாக இருந்தன. ஓட்டு கட்டடங்களால் பல்வேறு விபத்துக்கள் நடந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி, அனைத்து கட்டடங்களும் கான்கிரீட் கட்டடங்களாக கட்டப்பட்டன. பெரும்பாலான கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் குறுகிய காலத்திலே அதன் உறுதித் தன்மையை இழந்து, சேதமான நிலையில் பயன்படுத்த முடியாமல் தவிர்க்கப்பட்டன. அதேபோல் அரசு பள்ளிகளில் உள்ள ஓட்டு கட்டடங்கள், தரம் இல்லாமல் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டடங்கள் பெரும்பாலான அலுவலகங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன.

நாளடைவில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் கட்டடங்களில் விஷப்பூச்சிகள் தங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் விபரீதத்தை உணராமல், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பள்ளி வளாகங்களில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களில் விடுமுறை நாட்களில் சிறுவர்கள் ஓடிப் பிடித்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விஷப்பூச்சிகள் மற்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களால் சிறுவர்களுக்கு ஆபத்து உண்டாகும் நிலை உள்ளது. விபத்திற்கு முன் பாழடைந்த கட்டடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்தலாம்.

புதிய அரசு கட்டடங்களோ, பள்ளிகள் என்றால் விளையாட்டு மைதானமோ, பூங்காக்களோ ஏற்படுத்தலாம். சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்ட மரங்கள் வளர்க்க கற்றுத் தரலாம். குறிப்பாக நரிக்குடி, வீரசோழன் புல்வாய்க்கரை அரசு பள்ளிகளில் பாழடைந்த ஓடு, கான்கிரீட் கட்டடங்களால் மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. இதுபோன்ற கட்டடங்களை அகற்றினால் பாதுகாப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இடிந்து விழும் அபாயம்

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பயன்பாடில்லாமல் இடியும் நிலையில் இருக்கும் கட்டடங்களில் சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. விடுமுறை நாட்களில் சிறுவர்கள் விளையாடுகின்றனர். விஷப்பூச்சிகள் ஆபத்து உள்ளது. அது போல இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை இருக்கிறது. இது போன்ற பாழடைந்த கட்டடங்களை கண்டறிந்து, அப்புறப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் சிறுவர்களுக்கு மரம் வளர்க்க ஆர்வத்தை தூண்டலாம். விபத்துக்கு முன் இதுபோன்ற கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.– தமீம் அன்சாரி, சமூக சிந்தனையாளர், வீரசோழன்

Related posts

Leave a Comment