கலங்கிய மக்கள்; கலங்கடித்த வியாபாரிகள்; 144 தடை உத்தரவால் எகிறிய காய்கறி விலை

விருதுநகர் : கொரோனா 144 தடை உத்தரவை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவித்தும் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில் நேற்று மார்க்கெட்டிற்கு படையெடுத்த மக்களால் காய்கறிகள் விலையை மூன்று மடங்கு உயர்த்தி வியபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டினர். இதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய உணவு பாதுகாப்பு துறை எப்போதும் போல் தனது துாக்கத்தை இதிலும் கடைபிடித்ததால் பலரும் அதிருப்தியடைந்தனர்.

மக்களும் காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்கும் நோக்கத்தில் போட்டி போட்டு வாங்கினர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திய வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றனர். கிலோ ரூ. 10க்கு விற்ற தக்காளி ரூ.70, ரூ. 30 க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.120, சின்னபாகற்காய் ரூ.120, ரூ. 30க்கு விற்ற காரட் ரூ.170, பத்து ரூபாய்க்கு விற்ற தக்காளி 40, ரூ. 15 தேங்காய் 45 என பொருட்கள் விலை உச்சத்தை தொட்டது.

பொதுமக்களும் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து வாங்க இரண்டு மணி நேரத்தில் அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்தன. காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட பொருட்கள் அன்றாடம் கிடைக்கும் என அறிவித்தும் மக்கள் முண்டியடித்து கொண்டு வாங்கியதால் காய்கறிகளின் விலை எகிறியது. இதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய உணவு பாதுகாப்பு துறை கண்டும்காணாது அலட்சியம் காட்டியதால் இந்நிலை ஏற்பட்டதாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment