கொரோனாவுக்காக 8 ஆயிரம் படுக்கைகள்; ஆதரவற்றோருக்கு உணவு வழங்க ஏற்பாடு: விருதுநகர் கலெக்டர் தகவல்

விருதுநகர் : ”விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 28 கல்லுாரி விடுதிகளில் 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக,”கலெக்டர் கண்ணன் கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: கொரோனா தொற்று சம்பந்தமாக சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார்நிலையில் உள்ளன. தொற்று தீவிரமடையும் பட்சத்தில் 28 கல்லுாரிகளின் விடுதிகளில் 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 210 நபர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களில் 28 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட 59 நபர்களிடம் தனிமை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற நபர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டு அதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்ட எல்லையில் 16 இடங்களில் போலீசார் மூலமாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளே, வெளியே செல்வது கண்காணிக்கப்பட்டு தேவையற்ற பயணங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. காய்கறி, உணவு, அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதரவற்றோர் உணவின்றி சிரமப்படாமல் இருக்க பி.டி.ஓ., நகராட்சி அலுவலகங்களில் உணவு தயாரிக்கும் ஏற்பாடுகள் இன்று முதல் செய்யப்படும்.

விலக்களிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை நுகர்வு செய்யும் இடங்களில் இடைவெளி பின்பற்ற வேண்டும். இதற்காக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தடை உத்தரவு காலத்தை சிரமமின்றி எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில் பொருட்களை அதிக விலையில் விற்பதோ , பதுக்குவதோ கண்டறியப்பட்டால் இந்திய தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் இருமல், தும்மல் இருந்தால் டாக்டரை அணுகி மருந்து பெறவும்.தாங்களாகவே முன்வந்து மருந்து கடைகளில் வாங்க வேண்டாம். தற்போது கொரோனாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருந்துகள் மிக்க வீரியமானவை. தானாக எடுத்து கொண்டால் பின்விளைவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதியோர் இல்லங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு தயார் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம். ரேஷன் வினியோகம் தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தலைமையில் ரேஷன் கடை வாரியாக டோக்கன் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏப்ரலுக்கு தேவையான பொருட்களை இப்பவே வாங்கி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். தன்னார்வ நிறுவனங்கள் ஆதரவற்றோருக்கு தன்னிச்சையான முறையில் உணவு வழங்க வேண்டாம். மாவட்டத்தில் போதுமான அளவு சுகாதார ஊழியர்கள் உள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களில் வசதிகள் குறைவாக வாய்ப்புள்ளது. இதனால் தான் பொதுமக்கள் வீட்டிலே இருக்கும் படி அரசு அறிவுறுத்தி வருகிறோம்.

இருப்பினும் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 ஆயிரம் நோயாளிகளை சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயாராக உள்ளனர். தடையை மீறி வெளியே கூட்டம் கூட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும், என்றார்.

Related posts

Leave a Comment