தடை உத்தரவு எதிரொலி; நெரிசலில் சிக்கிய நகர்கள்

சிவகாசி : நேற்று மாலை 6:00 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை என அனைத்து நகர்களிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதியது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 6:00 மணி முதல் ஏப்.1 வரை தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவு பிறப்பித்தாலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருக்காது என அரசு தெளிவு படுத்தி உள்ளது. ஆனாலும் நேற்று முன்தினம், நேற்றும் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலை மோதியது.

சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர். சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய்கறி வாங்க குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக சரி செய்தனர்.

இதே போல் சிவகாசி என்.ஆர்.கே.ஆர்., ரோடு, ரத வீதிகள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் மக்களை ஒழுங்கு படுத்தியதுடன் வாகனங்களையும் சரி செய்து போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தினர்.

Related posts

Leave a Comment