தலைவருடன் மோதல் போக்கு ஊராட்சி செயலர் இடமாற்றம்

சிவகாசி : சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் ஊராட்சி செயலரை பணி மாறுதல் செய்து பி.டி.ஓ., உத்தரவிட்டார்.

சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் ஊராட்சி தலைவராக லீலாவதி வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஊராட்சி செயலர் சீனிவாசன் லீலாவதிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனால் ஊராட்சி செயலரை மாற்ற தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தார். கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலரை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு காலையில் பணிக்கு வந்த ஊராட்சி செயலர் அலுவலகம் பூட்டபட்டிருந்ததால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் விஷ்ணுபரன், ரவி பி.டி.ஓ., ஊராட்சி செயலரிடம் விசாரித்தனர்.

இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி ஊராட்சி செயலர் சீனிவாசனை பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.அவரது செய்தி குறிப்பு: சித்துராஜபுரம் ஊராட்சி செயலர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டின் படியும், அவரை மாற்றம் செய்ய வேண்டும் என ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் கட்டசின்னம்பட்டி ஊராட்சி செயலராக பணி மாறுதல் செய்யப்படுகிறார். கட்டசின்னம்பட்டி ஊராட்சி செயலர் அருள்ராஜ் சித்துராஜபுரத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment