விழிப்பு இல்லையே ! தடை உத்தரவு இருந்தும் சுற்றித்திரியும் மக்கள்… நாமும் போலீசார், அரசுக்கு ஒத்துழைப்போமே

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கைகாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் பொதுமக்களும் விழிப்பின்றி சுற்றி திரிவதை கைவிடுவதோடு போலீசார், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணரவேண்டும்.

மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வெளியில் நடமாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கொரோனா பாதிப்பு குறித்து அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர். இது மாலை வரை வாடிக்கையாகவே இருந்தது. இதனால் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகாக தான் அரசு ஊழியர்களும், போலீசாரும் வெளியே இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணரவே இல்லை.தற்போது பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவை சமுக ஆர்வலர்களும் பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர்.கொரோனா தொற்றுக்கு மக்கள் நடமாட்டம், அதிக கூட்டமே பரவுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்நாள் வரை பொதுமக்கள் தேவையற்ற கூடுகைகளை தவிர்க்கவில்லை. அரசு அத்தியாவசிய கடைகள் செயல்படும் என அறிவித்தும் கடை இருக்காது என்று பரப்பப்படும் தேவையற்ற வதந்தியால் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இது போன்ற தேவையற்ற வதந்திகளை நம்புவதை தவிர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நம்மால் இயன்றவரை வீட்டில் இருந்தே உதவி செய்ய வேண்டும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

இது உயிர்காக்கும் விடுமுறை

இதை ஏதோ கோடை விடுமுறை போல் நினைத்து மக்கள் மகிழ்கின்றனர். இது உயிர்காக்கும் விடுமுறை. மக்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. இது போன்ற நேரங்களில் தேவையற்ற நெரிசல்களை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய கடைகளில் அதிகம் கூட்டம் நிரம்பி வழிந்தால் அருகில் உள்ள போலீசாரிடம் கூறி இடைவெளி பின்பற்றுமாறு அறிவுறுத்த கேட்கலாம். கொரோனா எதிராக நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நம்மை மட்டுமல்லாது நம்மை சார்ந்திருக்கிறவர்களையும் காப்பாற்றும்.

-பாஸ்கரன், தனியார் ஊழயர், விருதுநகர்.

Related posts

Leave a Comment