Narendra Modi Prime Minister of India

டெல்லி: கொரோனாவை தடுக்க கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1024 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் நாட்டு மக்களிடம் சமூக தொற்றாக மாறுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மூலம் மட்டுமே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதால் மத்திய அரசு இந்த லாக் டவுன் உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்றும் ரேடியோவில் “மனதின் குரல்” (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களிடம் பேசுவது வழக்கம். அன்றைய மாதத்தில் நாட்டில் நடந்த முக்கிய மாற்றங்கள், நல்ல விஷயங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார். அத்துடன் மக்கள் எந்தநெந்த விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த

வேண்டும் என்பது குறித்தும் பேசுவார்

அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேச தொடங்கி உள்ளார். . தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்க மக்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து பேசி வருகிறார். பிரமர் மோடி பேசுகையில், கொரோனாவை தடுக்க கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களில் பலருக்கு என் மீது கோபமும் இருக்கலாம். கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் நமக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், யாரும் வேண்டுமென்றே விதிகளை மீற விரும்பவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அவ்வாறு செய்கிற சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்கிறேன். இந்த ஊரடங்கை பின்பற்றாவிட்டால், கொரோனா வைரஸின் ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது கடினமாகிவிடும் என்றார்.

Related posts

Leave a Comment