ஸ்ரீவில்லிபுத்துார்: கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கபட்டநிலையில் இளைஞர்கள் டூவீலரில் சுற்றி திரிவது ஆங்காங்கே கூட்டமாக இருப்பது என ஊரடங்கை மீறி செயல்பட்டால் அவர்களை கைது செய்ய ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் தயாராகி வருகின்றனர்.
ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய பணிகள் மற்றும் அரசு பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே வெளியில் நடமாடவும், மற்றவர்கள் வீடுகளுக்குள் இருக்கவும் அறிவுறுத்தபட்டிருந்தது.
ஆனால் இதை பலரும் கடைபிடிக்காமல் காலையில் வாக்கிங் செல்வது, டூவீலர்களில் சுற்றி திரிவது, ஷாப்பிங் செல்வது, ஆங்காங்கே 5க்கு மேற்பட்டு கூட்டமாக இருப்பது என விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் அவ்வப்போது அறிவுறுத்தியும் யாரும் கேட்பதில்லை. இதனால் இதுவரை பொறுமைகாத்த போலீசார் தற்போது சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். இதன்படி நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி., கண்காணிப்பில் உள்ள 8 போலீஸ் ஸ்டேஷன்களில் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து இன்று முதல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வீட்டு பிள்ளைகள் வெளியில் சுற்றி திரிவதையும், டூவீலர்களில் தேவையின்றி செல்வதையும் கட்டுபடுத்த பெற்றோர்கள் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.