Sattur news

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் கிராமங்களில் சிறுவர்கள் தெருவில் விளையாடுவது தொடர்கிறது.

விபரீதம் தெரியாமல் பெற்றோர்களே அனுமதிப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தின் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று வந்தவர்களை அரசு வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.நகர் பகுதியை விட கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடு சென்று திரும்பி உள்ளனர். வைரஸ் தொற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியாத நிலையில் இவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருப்பது அவசியமாகும்.

மேலும் 14 நாட்கள் சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிராமங்களில் உள்ளவர்கள் தங்களுக்கு நோய் பரவாது என்ற நம்பிக்கையில் சுதந்திரமாக உலா வருகின்றனர். தனிமை படுத்தப்பட்டவர்கள் வீடு அருகில் உள்ளவர்கள் குழந்தைகளை வெளியில் விளையாட விடுகின்றனர். கிராமங்களில் சிறுவர்கள் காலியாக உள்ள இடங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடுகின்றனர். இதனால் சமூக விலகல் மீறப்படுகிறது. பலர் முக கவசம் இன்றி விளையாடும் போது நோய் தொற்று பரவும் அபயம் உள்ளது. ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் பாதிப்பு தங்களுக்கு தான் என்பதை உணராமல் உள்ளனர்.

Related posts

Leave a Comment