ராயபுரம்:கொரோனா நோயாளிகளுக்கு உதவ, தானியங்கி ரோபோக்களை, ஸ்டான்லி மருத்துவமனையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
பின், அவரது பேட்டி:ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டில், 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில், 100 படுக்கைகளில், ‘வென்டிலேட்டர்’ வசதி உள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 48 பேர் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக மூன்று ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனம் தயாரித்த, இந்த ரோபோக்களை, பயிற்சி பெற்ற செவிலியர்கள் இயக்குகின்றனர். நோயாளிகளின் தேவைக்கேற்ப, விரைவில் ரோபோக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.இந்த ரோபோக்களுக்கு, ‘ஷபி, ஷபிங் போ, ஷபிங் மெடிக்’ என, பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மூன்று தானியங்கி ரோபோக்களின் விலை, 3 லட்சம் ரூபாய். இந்த ரோபோக்களால், அதிகபட்சம், 1.5 கி.மீ., வரை பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
இந்த ரோபோக்கள், கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர், மாத்திரைகளை கொடுக்க உதவுகிறது. இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்