பல்வேறு யோசனைகளுடன் மோடிக்கு சோனியா யோசனை

பல்வேறு யோசனைகளுடன் மோடிக்கு சோனியா யோசனை

புதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு யோசனைகளுடன், பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை ஈடு செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களின் சம்பளத்தில், 30 சதவீதம் குறைத்துக் கொள்ள, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோருடன், சமீபத்தில் தொலைபேசியில் பேசினார். அப்போது, அவர்களுடைய ஆலோசனைகளை கேட்டார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, சோனியா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், மத்திய அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் காங்., அளிக்கும். செலவுகளை குறைக்க, சில யோசனைகளை தெரிவிக்கிறேன். தகுதியிருப்பின், அதை பரிசீலித்து செயல்படுத்தவும்.

* ஒரு ஆண்டில் மட்டும், விளம்பரத்துக்கென, மத்திய அரசு, 1,250 கோடி ரூபாய் செலவிடுகிறது. பத்திரிகை, ‘டிவி’ உட்பட அனைத்து ஊடக விளம்பரத்தையும் நிறுத்தவும். கொரோனா போன்றவற்றுக்கான விளம்பரங்களை மட்டும் செய்யலாம்

* தலைநகர் டில்லியில், புதிய பார்லிமென்ட் கட்டடம் உட்பட, பல்வேறு அரசு கட்டடங்கள் கட்ட, நகரை அழகுபடுத்தும், 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை, தற்போதைக்கு முழுமையாக ஒத்தி வைக்கவும்

* பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்துக்காக, 393 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதனால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணத்துக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கலாம். அவசரகால மற்றும் தவிர்க்க முடியாத பயணத்தை மட்டும், பிரதமரின் அனுமதியோடு மேற்கொள்ளலாம்

* சம்பளம், ஓய்வூதியம், மத்திய அரசு திட்டங்களைத் தவிர, மத்திய அரசின் செலவீனத்தில், 30 சதவீதத்தை குறைக்கலாம். இதன் மூலம், ஆண்டுக்கு, 2.5 லட்சம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தலாம்

* கொரோனாவுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ‘பிரதமர் கேர்’ நிதியை, பிரதமர் தேசிய நிவாரண நிதியுடன் சேர்க்க வேண்டும். அப்போது தான், அதில் வெளிப்படை தன்மை இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Related posts

Leave a Comment