லாப நோக்கில் செயல்படுவோரை அரசு தடுக்க வேண்டும்: ஸ்டாலின்

சென்னை : ‘அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில், லாப நோக்குடன் செயல்படுவோரை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:ஊரடங்கால், மக்களின் வழக்கமான வருமானம் குறைந்துள்ளது; பலருக்கு வருமானம் இல்லை. இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை, நாளுக்கு நாள் கூடி, மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உணவு பொருட்களில், துவரம் பருப்பு விலை, 30 சதவீதம்; பூண்டு, மிளகாய் விலை, 100 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும், தாறுமாறாக உயர்ந்து வருகிறது.இந்த விலையேற்றம், இடைத்தரகர்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கும்.

இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, லாப நோக்கத்துடன் செயல்பட கூடியவர்களை தடுத்து நிறுத்தி, விலையேற்றத்தையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்த, குடும்ப அட்டைகளுக்கான நிவாரணம், 1,000 ரூபாய் என்பது, 21 நாள் ஊரடங்கு காலத்திற்கு போதுமானதாக இல்லை.

டில்லியில் தனியார் ஆய்வகம் ஒன்று, நான்கு சக்கர வாகனத்திற்குள்ளேயே, சம்பந்தப்பட்டோரை உட்கார வைத்து, 15 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும், விரைவு சோதனையை மேற்கொண்டுள்ளது.விரைவு சோதனைகளை அதிகப்படுத்தும் வகையில், அரசுகள் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.

கொரோனாவின் இறுதி விளைவாக, பட்டினி சாவுகள் ஏற்பட்டு விடாமல், தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


சைதையில் ஆய்வு பணி

சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று, அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா என, ஸ்டாலின் விசாரித்தார். பொதுமக்களிடம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வலியுறுத்திய அவர், பொருட்களின் விலையேற்றம் குறித்தும் விசாரித்தார். சுப்பிரமணியர் கோவில் தெரு, பஜார் சாலை பகுதிகளில், 500 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு, தேவையான உணவு பொருட்களை வழங்கும்படி, தொண்டு நிறுவனத்திடம், ஸ்டாலின் ஒப்படைத்தார்.

Related posts

Leave a Comment