tamilnadu-lockdown-will-be-extended-for-14-days-cm-calls-cabinet-meet/

லாக்டவுன்.. இன்று அமைச்சரவையை கூட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிரடி அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் (Lock down) நீட்டிப்பு அவசியம் என்று மருத்துவர் குழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலோசனை வழங்கி உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அமைச்சரவையை கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவக் குழுவுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர், டாக்டர்கள் குழுவை சேர்ந்த டாக்டர் பிரதீபா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் பொது சுகாதாரம் மிக சிறப்பாக இருக்கிறது. அதை இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்பது பற்றி பேசினோம்.

மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை அறை ஒதுக்கப்பட்டு உள்ளது, அதை பற்றியும் ஆலோசித்தோம். நோயாளிகளுக்கு, எந்த மாதிரி தேவை உள்ளது, அவர்கள் குடும்பத்தினருக்கு எந்த மாதிரி தேவை உள்ளது என்பது பற்றியும் பேசினோம் . இந்த பிரச்சனையை எதிர்கொள்வதில், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மிகவும் முக்கியம். அவர்களின் பாதுகாப்பு மிகுந்த முக்கியமும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார். இந்த மாதிரி நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. எனவே இன்னமும் 14 நாட்களுக்கு இந்த லாக் டவுன் நீடிக்கப்பட வேண்டும்

என்பது மருத்துவர்களின் பரிந்துரை. இந்த 14 நாட்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தி கண்டறியப்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் பிரதீபா தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் லாக்டவுன் காலகட்டத்தை இரண்டு வாரங்கள் நீட்டிப்பது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது

வரும் 14ம் தேதி வரை தான் மத்திய அரசால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதை வாபஸ் பெறுவதற்கு முடியாது என்ற நிலையில் நீட்டிப்பு செய்ய முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மருத்துவர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் இன்று மாலை அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம், பண வினியோகம் குறித்து புதிய அதிரடி முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

Related posts

Leave a Comment