கொரோனாவை தடுக்க மே 3 வரை ரயில் சேவைகள் ரத்து

புதுடில்லி : கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, மே, 3ம் தேதி வரை, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது, உலகையே கதி கலங்க வைத்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மாதம், 25ல் இந்தியாவில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, 25-ம் தேதி முதல், சரக்கு ரயிலைத் தவிர அனைத்து பயணியர் ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ரயில் சேவை

இதையடுத்து, இந்தியரயில்வே, பயணியர் சேவையை, 3-ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து, ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்வதால், அனைத்து பயணியர் ரயில் போக்குவரத்தும், வரும், 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், மெட்ரோ, புறநகர் உட்பட, அனைத்து பயணியர் ரயில்களும், 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வகையில், சரக்கு ரயில் போக்குவரத்து தொடர்ந்து இயக்கப்படும். மே, 3-ம் தேதி வரை, அனைத்து ரயில் நிலையங்களிலும், முன்பதிவு, முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கும் அலுவலகம் மூடப்பட்டு இருக்கும்.

ஏப்ரல், 15-ம் தேதிக்குப் பின், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, அந்த டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை முழுமையாக திருப்பி வழங்க, மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, எந்த முன்பதிவும் இருக்காது. சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படாது. ஜூன், 21-ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்கள் அனைவரும், டிக்கெட்டை ரத்து செய்தால், முழுமையாக, ‘ரீபண்ட்’ பெறலாம்.இவ்வாறு, ரயில்வே தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வே, தினமும், 9,000 பயணியர் ரயில்களையும், 3,000 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களையும் இயக்கி வருகிறது. ஊரடங்கால், 12 ஆயிரம் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment