அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

சென்னை: அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையத்தளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வருகிறது. புத்தகம் அச்சடிப்பதில் காலதாமதம் ஆவதால் ஏற்படும் சிக்கலை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவி வரும் ‛கொரோனா வைரஸ்’ தொற்றால் தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால், மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் சமயத்தில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், கல்லூரி, பல்கலை.,கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிப்பு பணி இன்னும் துவங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து வகுப்பு பாடங்களுக்கு சுமார் 10 கோடி புத்தகம் அச்சடிக்க மார்ச் 9ல் டெண்டர் விடப்பட்டது. மார்ச் 3வது வாரம் டெண்டர் முடிவடைந்து ஏப்ரல் முதல் வாரம் அச்சடிப்பு துவங்கப்படும். ஆனால், ஊரடங்கு காரணமாக அச்சகங்கள் மூடப்பட்டிருப்பதால் புத்தகங்கள் அச்சடிப்பு பணி துவங்கவில்லை. இதனால், அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்களை இணையதளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வருகிறது.

முதல்கட்டமாக 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இ-புத்தகம் இணையத்தில் வெளியிடப்படுகிறது. 2ம் கட்டமாக 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு வெளியிட பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

Leave a Comment