ஊரடங்கு தளர்வு எப்போது? அரசு குழு முடிவு நாளை அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு கூட்டம், நேற்று நடந்தது. இன்று அல்லது நாளை, அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், 20ம் தேதிக்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின், எப்படி படிப்படியாக ஊரடங்கை தளர்த்தலாம் என, ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவில், வருவாய், தொழிலாளர், டி.ஜி.பி., சுகாதாரம், தொழில், வீட்டுவசதி, கல்வி, போக்குவரத்து துறை செயலர்கள், சுகாதாரத் துறை இயக்குனர், நுண்ணுயிரியல் துறையை சேர்ந்த, முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன், ஓய்வுபெற்ற டாக்டர் குகநாதன், இந்திய மருத்துவ சங்க பிரதிநிதி உட்பட, 17 பேர் இடம் பெற்றிருந்தனர்.
புதிதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தேசிய தொற்றுநோய் மைய இயக்குனர், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் கூட்டமைப்பு பிரதிநிதி, சிறு, குறு தொழில் கூட்டமைப்பு பிரதிநிதி ஆகியோர்சேர்க்கப்பட்டனர்.இக்குழுவின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இரண்டாவது நாளாக, நேற்று மாலை, 3:30 முதல், 5:20 வரை, சென்னை, தலைமை செயலகத்தில், குழுத் தலைவரும், நிதித்துறை செயலருமான கிருஷ்ணன், தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி, நாளை மறுதினம் முதல், எந்தெந்த தொழில்கள் செயல்பட அனுமதிஅளிப்பது; தொழிலாளர்கள் பணிக்கு செல்ல, எவ்வளவு வாகனங்களை இயக்க அனுமதிப்பது என்பது குறித்து ஆலோசித்தனர்.
மேலும், மே, 3 முதல் ஊரடங்கை, படிப்படியாக எவ்வாறு தளர்த்தலாம் என்றும் ஆலோசித்து, அறிக்கை தயார் செய்தனர். அந்த அறிக்கை, அரசிடம் வழங்கப்படும். அதன்பின், முடிவுகள் வெளியிடப்படும்.சேலத்தில், முதல்வர், இ.பி.எஸ்., அளித்த பேட்டியின்போது, குழு பரிந்துரைகள், 20ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறியிருந்தார். எனவே, அரசின் முடிவு, நாளை தெரிய வரும் என, கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment