சீனா முதலீடுக்கு,’கடிவாளம்’மத்திய அரசு அதிரடி

புதுடில்லி :சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள், இனி மத்திய அரசின் ஒப்புதலுடன் தான், இந்தியாவில் நேரடி முதலீடு மேற்கொள்ள முடியும். இதற்கான உத்தரவை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை பிறப்பித்துள்ளது.இந்தியாவில், ராணுவம், தொலைதொடர்பு, மருந்து, காப்பீடு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில், அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய, மத்திய அரசின் ஒப்புதல் தேவை.
அதேசமயம், தகவல் தொழில் நுட்பம், கட்டு மானம், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில், அன்னிய நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்து, பின், ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தால் போதும். தொழில் துவங்குவதை சுலபமாக்க, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், கொரோனா தாக்கத்தால், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அன்னிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை சுலபமாக கையகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்கும் நோக்கில், ‘அண்டை நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அல்லது முதலீட்டாளர்கள், இந்திய நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்வதற்கு முன், மத்திய அரசிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்’ என்ற விதிமுறையை, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அமல்படுத்தியுள்ளது.இதன்படி, இந்தியாவுடன், நிலப் பகுதியை எல்லையாகக் கொண்ட, சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், பூடான்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள், மத்திய அரசின் ஒப்புதலின்றி, இந்திய நிறுவனங்களில் நேரடி முதலீடு செய்ய முடியாது.இதனால், சிறப்பான நிதியாதாரம் உள்ள போதிலும், கொரோனா விளைவால், சந்தை மதிப்பில் சரிவை கண்ட இந்திய நிறுவனங்களை, அண்டை நாடுகளின் நிறுவனங்கள் சுலபமாக கையகப்படுத்த முடியாது.
அண்டை நாடுகளில், பாகிஸ்தான், பூடான் தவிர்த்து, இதர ஐந்து நாடுகளின் நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.கடந்த வாரம், சீனாவின் மத்திய வங்கி, இந்தியாவின் வீட்டு வசதி கடன் துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., நிறுவனத்தின், 1.75 கோடி பங்குகளை, 3,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்கு விலை மேலும் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முதலீடுகள் மூலம், அண்டை நாடுகளின் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை காலப்போக்கில் கையகப்படுத்துவதை தடுக்க, புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment