தொற்று நோயை வெல்லும் மனிதநேயம்:பிரதமர் பாராட்டு

புதுடில்லி: ‘கொரோனா தொற்று நோயை, மனிதநேயம் நிச்சயம் வெல்லும்’ என தெரிவித்துள்ள பிரதமர், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்படுவதாக, அமைச்சகங்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளம்வைரஸ் பரவலை தடுக்க, அமைச்சகங்கள் சார்பில் எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து, பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர்கள், ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் வழியாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.இவர்களுக்கு, டுவிட்டர் வழியாகவே, பிரதமர் மோடி பதிலளித்து வருகிறார்.டுவிட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘கொரோனாவுக்கு எதிராக, உலகமே ஒருங்கிணைந்து போராடி வருகிறது. தொற்று நோயை, மனிதநேயம் நிச்சயம் வெல்லும்’ என, கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளித்து, பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியர்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில், சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள மாட்டர்ஹார்ன் மலையில், 1,000 மீட்டருக்கு மேல் நீளமுடைய, மூவர்ண கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக, ஜெர்மாட் சுற்றுலாத்துறைக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் பதிவிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், வெளியிட்ட பதிவில், ‘ஊரடங்கில், பயணியர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், ரயில்வே நிற்காமல், மக்கள் நல பணிகளில் ஈடுபட்டுள்ளது’ என, தெரிவித்துள்ளார்.’இந்திய ரயில்வேயை நினைத்தால், பெருமையாக உள்ளது; இந்த நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்’ என, இதற்கு பதிலளித்து, மோடி பதிவிட்டுள்ளார்.

பெட்ரோலியத்துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவில், ‘ஊரடங்கு காலத்தில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சமையல் காஸ் சிலிண்டர்களை, வீடுகளுக்கு சென்று வினியோகிப்பவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை’ என, தெரிவித்துள்ளார்.இதற்கு, பிரதமர் மோடி, ‘இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக, தன்னலம் பாராமல், 24 மணிநேரமும் பணியாற்றுபவர்களுக்கு, எனது நன்றி’ என, தெரிவித்துள்ளார்.

காப்பாற்றும் கடமைவருமான வரித்துறை வெளியிட்ட பதிவில், ‘சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு. 10 நாட்களில், மத்திய நேரடி வரி வாரியம், வருமானவரி, ‘ரீபண்ட்’ தொகையாக, 5,204 கோடி ரூபாய் வழங்கியுள்ளது’ என, தெரிவித்துள்ளது.இதற்கு, மோடி, ‘சிறு மற்றும் குறு நிறுவனங்களை காப்பாற்றும் கடமை, வருமான வரித்துறைக்கு உள்ளது’ என, தெரிவித்து உள்ளார்.

விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் பூரி வெளியிட்ட பதிவில், ‘ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், இப்போது வரை, சரக்கு விமானங்கள், 464 டன் மருத்துவ பொருட்கள், உபகரணங்களை ஏற்றிச் சென்றுள்ளன’ என, தெரிவத்துள்ளார். இதற்கு மோடி, ‘மக்களுக்கு தேவையான பணிகளை செய்வதில், அமைச்சகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன’ என, தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment