‘ஒன்றிணைவோம் வா’:ஸ்டாலின் புது திட்டம்

சென்னை:”நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழகம்முழுவதும் பசியால் வாடும் மக்களுக்கு உணவு தருவோம்,” என, மாவட்ட செயலர்களிடம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:’ஒன்றிணைவோம் வா’ என்ற தலைப்பில், நம் பணியை துவக்க உள்ளோம். ஒட்டுமொத்த உலகத்தையும், கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது.

அனைவரும் ஒன்று சேர்ந்து, வைரசை வீழத்துவோம் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது.புயல், சுனாமி, வெள்ளம், தீ விபத்து, பஞ்சம் போன்ற, பல பேரிடர்களை சமாளித்துள்ளோம். தமிழகம் முழுவதும், பசி பட்டினியோடு இருப்பவர்களுக்கு உதவி செய்வோம். தற்போது, பசியால் வாடுபவர்களுக்கு, உணவு வழங்கி, தனித்தனியாக, தி.மு.க.,வினர் உதவி செய்து வருகின்றனர். அடுத்த கட்டமாக, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவி செய்வோம்.ஒருங்கிணைவோம்; உணவு தருவோம்; உயிரூட்டுவோம்; பசியை போக்குவோம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

சென்னை ‘டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்கள், போலீஸ் துறையினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட, மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரை, பாதுகாக்கும் கடமையை, ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறிஉள்ளார்.அறிக்கை சென்னையை அடுத்த வானகரத்தில், ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த, 51 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் சைமன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

அந்தச் சோக நிகழ்வுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து, மக்களை காக்கும் பணியில், அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், போலீஸ் துறையினரும், நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு, நாள்தோறும் களத்தில் நின்று, செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைஅளிக்கிறது.
விரைவு பரிசோதனை கருவிகள் வாயிலாக, உரிய முறையிலும் மிகப் பரவலாகவும் சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் தடுப்பு மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல், தமிழகத்தில் நிலவுகிறது.கூடுதல் கவனம்மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரை பாதுகாக்கும் கடமையை, ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.இதற்கிடையில், ‘கொரோனாவால் பாதிக்கப்படாமல் தடுக்க, மருத்துவ பணியாளர்கள் மீது, அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என, அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரனும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment