வடிவேலு பாணியில்.. அடுத்த “மண்டை” வரும் வரை.. இதைப் பிடி… புதுவையில் நூதன தண்டனை!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் கையில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை கொடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூதண தண்டனையை போலீஸார் வழங்கி வருகின்றனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வருகின்ற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது.

அத்தியாவசியத் தேவைகளை தவிற வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றக்கூடாது என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றது புதுச்சேரி அரசு.

இருப்பினும் வெளியே தேவையின்றி சுற்றுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் போலீஸார் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு நூதன தண்டனையும் கொடுத்து வருகின்றனர். அதுபோல் புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கீர்த்தி தலைமையில் போலீஸார் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சாலை அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அத்தியாவசிய தேவைகளின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களை மடக்கி பிடித்த போலீஸார், அவர்கள் கையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த தனித்திரு விழித்திரு விலகியிரு, ஊரடங்கு உத்தரவில் வெளியில் வராதீர்கள், என்னால் நோய் பரவுவதை அனுமதிக்க மாட்டேன் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூதன தண்டனையை வழங்கினர்.

Related posts

Leave a Comment