ஐயா.. அந்த சம்பவம்.. அடக்கம் பண்ண எங்க நிலத்தை தர்றோம்.. எடுத்துக்கங்க.. பிரதமருக்கு தென்னரசி கடிதம்

மதுரை: “ஐயா.. என் அப்பா விவசாயி… எங்களுக்கு, 3 ஏக்கர் நிலம் இருக்கு.. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ள டாக்டர், நர்ஸ், போலீசார், நாளிதழ் மற்றும் துாய்மை பணியாளர்கள் வைரஸ் பாதிப்பால் இறந்தால், உடலை அடக்கம் செய்ய, எங்களுடைய நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று 9-ம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற மாணவி பிரதமருக்கு உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உயிரிழந்துவிட்டார்.. அவருடைய சடலத்தை புதைக்க அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொற்று குறித்த அறியாமையால் மக்கள் இவ்வாறு செய்திருப்பினும், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை இது உண்டு பண்ணியது.. உயிரிழந்த 2 டாக்டர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தது மிகப் பெரிய விவகாரமாக உருவெடுக்கவும், கோர்ட் இந்த விஷயத்தை தானாக முன்வந்து கையில் எடுத்து கடிவாளம் போட்டது.

மத்திய, மாநில அரசுகள் இது சம்பந்தமான புது உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றனர். எனினும், டாக்டர் உயிரிழந்த தினத்தன்று கலவரமும், வன்முறையும் நிகழ்ந்தபோது, சடலத்தை புதைக்க முதல் ஆளாக முன் வந்து நிலம் தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான்.. இதையடுத்து பலரும் அர்ப்பணித்து உயிரிழந்தவர்களுக்காக தங்கள் நிலங்களை தர முன்வந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் மதுரை மாணவி தென்னரசியும் நிலம் தர விரும்பி அதற்காக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வாடிப்பட்டி அருகே உள்ள கச்சை கட்டி பகுதியை சேர்ந்த பாரதிதாசன் – செல்வி தம்பதியினரின் மகள்தான் தென்னரசி… ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றார்.. இவரது அப்பா ஒரு விவசாயி.. தங்களுக்கு இருக்கும் 3 ஏக்கர் விவசாய நிலத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து காய்கறி சந்தையில் விற்பனை செய்து வருகின்றார். தென்னரசி பிரதமருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“ஐயா, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த பாரதிதாசன் மகள் தென்னரசி நான் வாடிப்பட்டியில் உள்ள தாய் மெட்ரிக் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறேன். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயிலிருந்து நாட்டுமக்களை காப்பாற்ற தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சமூக விரோதிகள் மக்களை தூண்டிவிட்டு அடக்கம் செய்யவிடாமல் தடுத்துவருகிறார்கள். தன்னலமின்றி நமக்காக தொண்டாற்றும் பலர் இதனால் வேதனை அடைந்துள்ளனர் இதனால் இரவும் பகலும் பாடுபடும் மருத்துவர்கள் மனவேதனையில் உள்ளனர். எனது தந்தை சிறு குறு விவசாயி. அவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பணிபுரிந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், தூய்மை பணியாளர்கள் எனஅனைவரும் நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய என் தந்தை, தாயாரின் ஒப்புதலின் பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

இத்துடன் தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா நகல்களையும் இணைத்துள்ளார். தென்னரசி எழுதிய இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது… அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் இந்த மதுரை மாணவி!

Related posts

Leave a Comment