கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

#TNLockdown #வீட்டில்இரு #StayHome #TN_Together_AgainstCorona #Lockdown2 #Coronavirustamilnadu கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (ஹாட்ஸ்பாட்), மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (நான் ஹாட்ஸ்பாட்) மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்றும், மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள், தொற்றே இல்லாத மண்டலங்கள் பச்சை மண்டலங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், அந்த மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றாலும், அந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் எந்தெந்த மாவட்டங்கள் ‘ஹாட் ஸ்பாட்’, ‘ஹாட் ஸ்பாட் இல்லாதவை’ என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  ஹாட் ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) என்றால் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்களாகும். இங்கு அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அல்லது பரவல் விகிதம் அதிகரிப்பு என்பதை குறிக்கும். அந்த வகையில் 15 பேர் அல்லது 4 நாட்களுக்குள் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பு ஆவது என்ற வகையில் தமிழக சுகாதாரத்துறை மண்டலங்களை பிரித்து அறிவித்துள்ளது. தமிழகத்தில், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், தென்காசி, சேலம், நாகை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்ட பகுதிகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஆரஞ்சு மண்டலமாக இருந்த தஞ்சை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களும் தற்போது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 15ம் தேதி வரை 26 மாவட்டங்களாக இருந்த நிலையில் தற்போது, 30 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் திருவண்ணாமலை, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள் என்றாலும் ஆரஞ்சு மண்டலமாக இருக்கிறது. இந்த மாவட்டங்களில் 15 நபருக்கு குறைவாக தொற்று உள்ளது.28 நாட்களுக்குள் புதிதாக கொரோனா நோயாளி பாதிப்பு வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம் அதாவது பாதுகாப்பாக மண்டலமாக கருதப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment