மதுவிலக்கை முன்னெடுக்கும் பாமக… குடிபழக்கம் ஒழிந்தால் தான் வறுமை விலகும் -அன்புமணி

சென்னை: கொரோனா ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் நாள் முதல் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குடிபழக்கம் ஒழிந்தால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும் என்றும், வேலைவாய்ப்பு பெருகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவீட்டரில் பதிவு வெளியிட்ட சில நிமிடங்களில், அன்புமணியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி தனி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுக்கடைகளுக்கு பூட்டு

தமிழகத்தில் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திய பெருமை பாட்டாளி மக்கள் கட்சியையே சாரும். மதுவால் குடும்பங்கள் சீரழிவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது பாமக. கடந்த 2015-2016 காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தி அதில் குறிப்பிடும்படியான வெற்றியும் கண்டது

மதுவை ஒழிப்போம்

மதுவால் ஏற்படும் சொல்லொணாத் துயரங்களில் இருந்து பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி மதுவிலக்கு ஒன்று மட்டும் தான். இந்த மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி மதுவில்லா தமிழகம் அமைக்கவேண்டும் என்பதில் பாமக தொடர்ந்து உறுதியாக உள்ளது. மற்ற விவகாரங்கள் எப்படியோ ஆனால் மதுவிலக்கு விவகாரத்தில் பாமக தொடர்ந்து உறுதியாக நிற்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதனை ஊரடங்கிற்கு பிறகும் தொடர வேண்டும் என்பதே மது எதிர்ப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமிழருவி மணியன், மது எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த சசிபெருமாள் குடும்பத்தினர் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

Leave a Comment