ஜூலை 31 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

புதுடில்லி: ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும், அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும், ஏப்.,30ம் தேதி வரை, வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன், வீடியோ கான்பர்ன்சிங் மூலம் ரவிசங்கர் பிரசாத் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களின் அவர் கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும் பாணி மாறிவிட்டது. உலகெங்கிலும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்கின்றனர். நம் நாட்டிலும், ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இம்மாதம் இறுதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.

ஆன்லைன் சுகாதார சேவைகளை தென் மாநிலங்கள் சிறப்பாக கையாளுகின்றன. மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வேண்டும். ஊரடங்குக்கு பின் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க, பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment