லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? மே 2ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை.. முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே 2ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தின.

இதையடுத்து கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 14ம்தேதி காலை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். முன்னதாக ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் ஏப்ரல் 11ம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பின்னர் அடுத்த சில நாளில் தமிழக அரசே ஊரடங்கை ஏப்ரல் 30 தேதி வரை நீட்டித்தது.அதன்பிறகு தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊரடங்கை மே 3ம்தேதி வரை நீட்டித்தது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே 2ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உள்ள அந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள பல மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் சில தளர்வுகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment