டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..? யாருக்கு நஷ்டம்..? #TCS #Wipro #Infosys #Coronavirus

இந்திய ஐடி நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் புதிய வர்த்தகத்தைப் பெறப் போராடும் நிலையில், தனது லாப அளவீடுகளை அதிகரிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறது. புதிய வர்த்தகம் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது இருக்கும் வர்த்தகத்தை வைத்துத் தான் வருவாய் ஈட்ட முடியும், இந்நிலையில் லாப அளவீடுகளை அதிகரிக்கச் செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன் படி இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தற்போது முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், பலருக்கும் இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, Mindtree ஆகிய நிறுவனங்கள் தனது செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சப்காண்டிராக்ட் திட்டத்திற்காகச் செலவிடப்படும் தொகையை மற்றும் அவர்களுடனான வர்த்தகத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளது.

10-15% செலவு

இந்திய ஐடி நிறுவனங்களில் சராசரியாக மொத்த ஊழியர்கள் செலவுகளில் 10 முதல் 15 சதவீதம் தொகை சப்காண்டிராக்ட் முறை சேவைக்குச் செலவிடப்படுகிறது. இந்த 10 முதல் 15 சதவீத செலவுகளைக் கட்டுப்படுத்த அடுத்த வரும் மாதங்களில் சப்காண்டிராக்ட் முறை சேவையைக் குறைந்து செலவுகளையும் குறைக்க முடிவு செய்துள்ளது.

புதிய தொழில்நுட்பம்

மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் வர்த்தகத்திற்கும் சேவைக்கும் ஈடு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்றத் துவங்கியது. இதில் பெரும்பாலான திட்டங்கள் சப்காண்டிராக்ட் முறையில் இயங்கி வந்தது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் செலவுகள் இப்பரிவில் அதிகமானது.

தற்போது இந்தப் பிரச்சனையைக் களைய புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்ற சப்காண்டிராக்ட் அமைக்காமல் நிறுவனத்தில் நேரடியாகப் பணியாளர்களை அமைக்க முடிவு செய்துள்ளது டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, Mindtree நிறுவனங்கள்.

டிசிஎஸ்

இதைப்பற்றி டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் மிலிந் லகாட் கூறுகையில், இனி சப்காண்டிராக்ட்-களை நம்பி வர்த்தகம் செய்யும் நிலையிலிருந்து வெளியேறி செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்ற நிறுவனத்திலேயே திறன்வாய்ந்த ஊழியர்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் செலவில் சப்காண்டிராக்ட் செலவுகள் மட்டும் 13 சதவீதம். இதேபோல் விப்ரோ 22 சதவீதம், இன்போசிஸ் 12 சதவீதம், Mindtree 11 சதவீதம் அளவிலான தொகையைச் செலவு செய்து வருகிறது.

யாருக்கு லாபம்..? யாருக்கு நஷ்டம்..?

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, Mindtree போன்ற பெரும் நிறுவனங்களின் சப்காண்டிராக்ட் நம்பி இயங்கி வரும் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

இதேசமயம், புதிய தொழில்நுட்பத்தில் திறமையான பணியாளர்களுக்குப் பெரு நிறுவனங்களில் அதிகளவிலான டிமாண்டு உருவாகும். இதன் மூலம் திறமையான ஊழியர்களுக்கு அதிகச் சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related posts

Leave a Comment