1,200 புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் பயணம்!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தங்கி பணிபுரிந்துவந்த ஆயிரக்ககணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு திரும்பி அனுப்ப மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரி வந்தனர்.

புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்துகளில் அனுப்பிவைக்க உள்துறை அமைச்சகம் அனுமதித்த நிலையில் தொலைதூரத்திற்கு லட்சக்கணக்கானவர்களை அனுப்புவது சிரமம் என மாநில அரசுகள் கருதின. இதனை மத்திய அரசிடம் அவர்கள் வலியுறுத்தினர். 

மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 வார காலத்திற்கு பிறகு சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது மத்திய அரசு.

அந்த வகையில் தெலங்கானா மாநிலம் லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்டின் ஹாதியா மாவட்டத்திற்கு 1,200 பேருடன் இன்று காலை 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்  புறப்பட்டுச்சென்றது. புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சிறப்பு ரயில் இதுவாகும்.
பொதுவாக ஒரு பெட்டியில் 72 பேர் பயணம் செய்யலாம் என்றாலும் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் ஒரு பெட்டியில் 54 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

Related posts

Leave a Comment