சிறு வயதில் வறுமை.. படிப்பு ஒன்றே பிரதானம்..டிஜிட்டல் துறையில் சாதித்த தரணீதரன்

வாழ்க்கையில் எல்லோருக்குமே சாதிக்க வேண்டும் என்ற உந்துதால் இருக்கும். பெயர் , புகழ்? அந்தஸ்து எல்லாம் பெற்று சமூகத்தில் நல்ல மரியாதையோடு வாழ வேண்டும் என நினைப்போம். அதற்காக உழைக்கவும் செய்வோம்.
சொந்த ஊரில் சொந்த வீடு.. சொந்தமாக 3 கார்கள்.. வசதியான வாழ்க்கை.. 3 வேளை சுவையான சாப்பாடு.. இப்படி ஒரு வாழ்க்கையை எல்லோருமே வாழ வேண்டும் என்று நினைப்போம்.. இப்படிபட்ட வாழ்க்கை கொண்ட ஒருவருக்கு சில சூழ்நிலைகள் காரணமாக சொந்த வீடு இழந்து, வசதி வாய்ப்புகளை இழந்து கடைநிலைக்கு வரும்போது அந்த நபரின் மனதில் என்ன தோன்றும்.. கண் முன்னே இருண்ட எதிர்காலம்.. எப்படி சமாளிப்பது என்று மனம் ஒடிந்து நின்றிருப்போம்..

ஆனால் தரணீதரன் அப்படி மனம் ஒடிந்து நிற்கவில்லை..தன் கையில் ஒன்றும் இல்லை என்றாலும் கூட தன்னம்பிக்கை மட்டும் மனதில் கொண்டு அவமானங்கள், ரணங்களை உரமாக்கி, கல்வியை பிரதானமாக்கி சுய தொழிலில் சாதனை புரிந்து இன்றைய இளைஞர்களுக்கு முன் உதாரணமாய் திகழ்கிறார்.
நம் தமிழ் திசை இணையதளத்திற்காக அவருடைய சாதனை பயணம்.. அவருடைய வார்த்தைகளில்.. ஹாய் நான் தரணீதரன் அப்பா கணித Professor, அம்மா பார்மசிஸ்ட்,
சின்ன வயசுல எனக்கு வசதியான வாழ்க்கை தான். ஆனா ரொம்ப நாள் நீடிக்கல. உறவுகளுக்கு கொடுத்த கடன் திரும்ப வரல. அதனால சில இடங்கள்ல கடன் வாங்க வேண்டிய சூழல். தினமும் வீட்டுக்கு கடன்காரர்கள் வந்து பணம் கேட்க, அப்பா முடிஞ்சவரைக்கும் குடுத்துடுறேன்னு கண்கலங்க சொல்றப்போ என்னடா நம்ம வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு னு வருத்தப்பட்டு இருக்கேன், 4 ஆம் வகுப்பு படிக்கும் போது Stock Market ல அப்பா பேர்ல முதலீடு பண்ணி என் தங்கைக்கு 1 பவுன் தங்க செயின் வாங்கிக் குடுத்திருக்கேன்.. ஆனா சில வருடங்கள்ல எல்லாம இழந்து நானும் தங்கையும் தட்டுல பழைய சாதம் சாப்பிடறப்போ வீட்டிக்கு வெளியே உங்களுக்கு சாப்பாடெல்லாம் ஒரு கேடா னு கேட்டிருக்காங்க.. மனசு அப்படி வலிக்கும்.. நானும் தங்கையும் கட்டிபிடிச்சு இதுக்காக அழுதிருக்கோம்..இன்னும் இந்த ரணம் மனசுல இருந்திட்டு தான் இருக்கு.

அப்போ என் அம்மா சொன்னாங்க.. இனி உன் கண் முன்னாடி இருக்கிற ஒரே ஆயுதம் படிப்பு மட்டும்தான் னு. அதுவரைக்கும் ரொம்ப சராசரி மாணவனா இருந்தா நான் கொஞ்சம் நல்லா படிக்க ஆரம்பிச்சேன். பத்தாம் வகுப்புல பள்ளியில் முதல் இடம்.. 12 ஆம் வகுப்புல பள்ளியில் 2 ஆம் இடம்.. நானும் வளந்தேன்.. எங்க கடனும் வளந்துடடே வந்தது. மருத்துவ நுழைவுத்தேர்வுல தகுதி இருந்தாலும் அப்பா கடன் வாங்கி படிக்க வைக்கிறேன்னு சொன்னாரு. ஆனா திரும்பவும் என் வாழ்க்கையில் கடன் வாங்க கூடாதுனு முடிவு பண்னேன். பொறியியல் சேர்ந்து கடினமா படிக்க ஆரம்பிச்சேன். 3 வது வருட இறுதி நாள் விப்ரோ கேம்பஸ் இன்டெர்வியூல செலக்ட் ஆயிட்டு 4 வருட படிக்கிறப்போ கையில் வேலையோட படிச்சேன்.
ஆனா கடன் மட்டும் எங்கள துரத்திட்டே இருந்தது. எனக்கு தொழில்முனைவோர் ஆகனும்னு ஒரு கனவு இருந்தது. படிப்பு முடிச்சதும் வேலைக்கு போனேன். கடன் முடியுற வரைக்கும் இந்த வேலையில விடக்கூடாது னு விடாப்பிடியா வேலைக்கு போனேன்.. பட்ட கடன் எல்லாத்தையும் குடும்பத்தோடு சேர்ந்து அடைச்சோம். 1997 ல இருந்து 2009 வரைக்கும் மனசுல பாரமா இருந்த கடன் விடுபட்டதுல ஒரு சந்தோஷம். ஆனா என் நோக்கம் என்னை துரத்திட்டே இருந்தது. லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் ஏதோ ஒரு வெறுமை எனக்குள்ள இருந்திட்டே இருந்தது. என்ன பண்ணணும்னு தெரியில.. ஆனா இந்த கோடிங் வேலை எனக்கு சரிபட்டு வராதுனு தோணுச்சு. வேலையை விட்டுட்டு 2009 ஆம் வருடம் மேற்படிப்பு படிச்சேன். அது எனக்கான நேரமாகவும் பயன்படுத்திகிட்டேன். நிறைய புத்தகங்கள் படிச்சேன். அந்த புத்தகங்கள் எனக்குள்ள நிறைய தாக்கங்கள உருவாக்குச்சு.
அப்போ தனியார் தொலைக்காட்சியில தொழில்முனைவோர் தொடர்பான நிகழ்ச்சியில வெற்றிகரமான தொழில்முனைவோர்கள பேட்டி எடுத்து ஒளிபரப்புவாங்க. அப்போ அம்மாகிட்ட சொல்லுவேன். நானும் ஒரு நாள் இது மாதிரி வெற்றிகரமான தொழிலமுனைவோரா வருவேன்னு. அதற்கு பிறகு சரியாக 5 1/2 வருட கடின உழைப்பு. அதை சாத்தியமாக்கி இருக்கிறது ரொம்ப பெருமையா இருக்கு என்று புன்னகைக்கிறார். அந்த புன்னகையில் நம்பிக்கையின் ஒளி பிரகாசிக்கிறது.
ஆம்.. தரணீதரன் இன்று வெற்றிகரமான டிஜிட்டல் மார்க்கெடிங் தொழில்முனைவோர். மேற்படிப்பு முடித்ததும் நேட்சுரல்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் பணி.
. அடுத்த 3 மாதத்தில் அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையின் தலைவர்.. அதற்கு பிறகு தரணீதரனுக்கு நிற்க நேரமில்லை.
தொடர்ந்து கடினமாக உழைத்து கொண்டே இருந்ததின் பலன், நிறைய அனுபவங்கள் மற்றும் நண்பர்களை பெற்றிருக்கிறார்.பிறகு வாழ்க்கையின் அடுத்த கட்டமாக Social Eagle என்ற நிறுவனத்தை தொடங்கி பல்வேறு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்திருக்கிறார். Asus, Nestle, Haagen Dazs, Vivo, Merries, Singapore Management University, Ricola, Nature Valley, Classic Polo போன்ற நிறுவனங்களுக்கு இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணி செய்திருக்கிறார்.
சாதாரணமாக ஒரு வீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைக்கு 16 முழு நேர பணியாளர்கள் மற்றும் 32 பகுதிநேர பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இந்த துறையில் இவ்வளவு வளர்ச்சி எப்படி சாத்தியம்.. வார்த்தைகளில் விவரிக்கிறார் தரணீதரன்.என்னை பொறுத்தவரைக்கும ஒரு விஷயத்தை செய்யறதுக்கு 3 திறன்கள் அவசியம் 1. Knowledge 2. Skill 3. Attitude இது மூன்றும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்க உழைப்பு கூடுதலா சேரும் போது நீங்களும் நிச்சயம் வெற்றியாளர் தான்.
என் Mentor அடிக்கடி சொல்லுவாரு.. வீட்ல இருந்து கிளம்பும் போது எல்லா சிக்னலும் பச்சை கலர் ல இருந்தா தான் கிளம்புவேன்னு சொன்னா எந்த வேலையும் தொடங்க முடியாது. அதுபோல ஒரு புது விஷயத்தை தொடங்கிறதுக்கு நேரம் காலம் எல்லாம் அவசியம் இல்ல. சாதிக்கனும்.. உழைக்கனும்னு முடிவு பண்ணிட்டு அடுத்த அடி எடுத்து வச்சிட்டு போயிட்டே இருக்கனும். உங்களுக்கு அனுபவ ரீதியா நிறைய விஷயங்கள் தெரிய வரும்.ரெண்டாவது சாதிக்கனும்னு ஒரு விஷயத்துல காலடி எடுத்துவச்சிட்டா பின்வாங்னும்னு யோசிக்கவே கூடாது, இது என் அம்மா சொல்வாங்க.
அடுத்து நான் தொழில் தொடங்கும் போது பணத்தை முதலீடு பண்ணல. என்னோட 1. Knowledge 2. Skill 3. Attitude இத 3 விஷயங்கள வச்சி தான் தொடங்கினேன்.. ஏன்னா கடன் வாங்க கூடாது னு தெளிவா இருக்கேன். என்னால மட்டும் இல்ல, சாதிக்கனும்னு நினைக்கிற எல்லோராலயும் நிச்சயமா இத பண்ண முடியும். எங்க டிஜிட்டல் மார்கெட்டிங் வகுப்புகள் லயும் நாங்க இத பிரதானமா சொல்லி தரோம் என்று நம்பிக்கை வார்த்தைகள் தரணீயிடமிருந்து உறுதியாக வருகிறது.
இப்போது கூட இந்த ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் மார்கெட்டிங் தொடர்பான ஆன்லைன் வகுப்புகளை எடுக்கிறார் தரணீதரன். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே தன்னுடைய முதன்மையான பணி என்று கூறுகிறார். உங்களின் சாதனைகள் வானத்தை தொடட்டும் தரணீதரன். வாழ்த்துக்கள்.


Related posts

Leave a Comment