அருப்புக்கோட்டையில் இரு சக்கர வாகன விபத்து: சுகாதார ஆய்வாளர் படுகாயம்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்ற அரசு மருத்துவமனைப் பிரிவு சுகாதார ஆய்வாளர் நிலை தடுமாறி சாலையிலேயே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சவுண்டையன் (56). இவர் மதுரை ராசாசி அரசு மருத்துவமனை சிறப்புப் பிரிவில் சுகாதார ஆய்வாளராகப் பணி செய்து வருகிறார். நாள்தோறும் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரைக்கு பணிக்குச் செல்லும் இவர், வழக்கம் போல புதன்கிழமை காலை தனது பணிக்காகக் கிளம்பி அருப்புக்கோட்டை புறவழிச் சாலை வழியாகச் சென்ற போது கட்டங்குடி விலக்கு அருகே முன்னால் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் திடீரென நின்றதால் அவ் வாகனத்துடன் மோதி நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த சவுண்டையன் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Related posts

Leave a Comment