தவிக்கும் மாணவர்களை தேற்றிய விண்வெளி வீராங்கனை சுனிதா

வாஷிங்டன்: கொரோனா காரணமாக, சொந்த ஊர் திரும்ப முடியாமல் அமெரிக்காவில் தவிக்கும் மாணவர்களிடம், ‘வீடியோ’ மூலம் உரையாடிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளார்.

கொரோனா பயண கட்டுப்பாடுகள் காரணமாக, நாடு திரும்ப முடியாமல், அமெரிக்காவில் ஏராளமான மாணவர்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்காக, இந்திய தூதரகம் சார்பில், இந்திய அமெரிக்கரான நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மே, 1ம் தேதி, மாணவர்களுடன், ‘வீடியோ’ மூலம் உரையாட, ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு மேற்கொள்ளும், விண்வெளி பயணத்திற்கு தயாராகி வரும் அவர், ஹூஸ்டன் நகரில், அவரது வீட்டின் சமையலறையில் இருந்தபடி, மாணவர்களிடம் பேசினார். இதன் பிறகு அவரது உரையாடல், ‘யுடியூப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ஒரே நாளில், 84 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

அரவணைப்பு

அதில், இந்திய மாணவர்களின் தற்போதைய நிலையை, ஒரு விண்கலத்தில் இருப்பது போல் ஒப்பிட்டுள்ளார். வீடியோவில், அவர் கூறி இருப்பதாவது: விண்வெளியில், 322 நாட்கள் இருந்தது, நான் என்பதில் இருந்து, நாம் என்பதை நோக்கி என்னை அழைத்து சென்றது. நீங்கள் செல்ல முடியாத இடத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு, உண்மையான அரவணைப்பை, இங்கிருந்தே கொடுங்கள். இந்த சமூகத்திற்கு, எந்த வகையில் உதவ முடியும் என, நீங்கள் சிந்திப்பதற்கான நேரத்தை, தனிமைப்படுத்துதல் வழங்கியுள்ளது.

வீட்டிலேயே இருப்பது, பொறுப்பாக இருப்பது மற்றும் பிறருக்கு உங்களால் தொற்று ஏற்படாதது ஆகியவை, உங்களை விட இன்னும் பெரிதான விஷயங்கள் உள்ளன என்பதை, புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.இவ்வாறு, சுனிதா கூறிஉள்ளார்.சுனிதாவின் கருத்து பகிர்வை, அங்குள்ள இந்திய மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.

மகிழ்ச்சி

இது குறித்து, இந்திய மாணவர் மையத்தின் தன்னார்வலர், செரி சிங் கூறும்போது, ”விமானம் மற்றும் விண்கலத்துறையில் எனக்கு மோகம் ஏற்பட்ட நிலையில், அதனை பின்தொடர உத்வேகம் அளித்தவர் சுனிதா. ”சர்வதேச அளவில் பிரபலமான, அவருடன் நடந்த உரையாடலால் மகிழ்ச்சி அடைந்தேன்,” என்றார்.


Related posts

Leave a Comment