பெண்ணின் உருக்கமான பதிவு

சென்னை: “ஐயா.. டாஸ்மாக் கடையில ஒரு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் ஃப்ரீயா குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்… உங்க பட்ஜெட்டுக்கு கோழி பிரியாணி செட் ஆகலைன்னா, பழைய கஞ்சியாவது குடுங்கய்யா.. பசங்க எல்லாம் பசியில இருக்கோம்” என்று ஒரு பெண் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை டாஸ்டாக்கடைகள் திறக்கப்படவுள்ளன. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது… இந்த பேரிடர் காலத்திலும் கடையை திறக்க வேண்டுமா என்பதுதான் பெரும்பாலானோரின் கேள்வி.. இதை சில குடிமகன்களே கேட்பதுதான் விழிப்புணர்வின் உச்சம்.. ஆனால் இதனால் பாதிக்கப்பட போவது நிச்சயம் பெண்கள்தான்!

இந்த நிலையில் தங்கள் மனக்குமுறலை ஏராளமான பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடியோ, வீடியோக்கள் மூலமாக ஆதங்கத்தை தெரியப்படுத்தி மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வீடியோவும் மனசைப் பிசைகிறது. உருக வைக்கிறது. அந்த வகையில் ஒரு பெண் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பேசி உள்ளதாவது: எல்லாருக்கும் வணக்கம்.. ஒரு சந்தோஷமான நியூஸ்.. என்னன்னு கேட்டீங்கன்னா, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்னு நியூஸ் போட்டிருந்தாங்க.. ரொம்ப சந்தோஷம்.. ஒரே ஒரு சின்ன வேண்டுகோள்.. ரேஷன் கடைங்களில் பொருள் எல்லாம் ஃப்ரீயா குடுக்கறாங்க.. அதேமாதிரி டாஸ்மாக் கடைகளிலும் ஒரு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் ஃப்ரீயா குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

குவார்ட்டர் என் வீட்டுக்காரர் அடிச்சாலும், அந்த பிரியாணியை வீட்ல பசியோட இருக்கிற எங்க குழந்தைங்களுக்கு எடுத்து வந்து தருவார்.. இன்னும் வேலைக்கு போறதுக்கு கம்பெனிகள் எதுவும் திறக்கல, ஆனால் டாஸ்மாக் கடைகள் திறந்தாச்சு… ரொம்ப சந்தோஷம்.. ஒரே ஒரு வேண்டுகோள், உங்க பட்ஜெட்டுக்கு கோழி பிரியாணி செட் ஆகலைன்னா, பழைய கஞ்சியாவது குடுங்கய்யா.. பாவம்.. பசியில இருக்கோம்.. பசங்க எல்லாம்.. நன்றி” என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

குடி அடிமைகளால் பாதிக்கப்பட்டு சீரழிந்து கிடக்கும் குடும்பங்களின் நிலையை.. அதனால் பாதிக்கப்பட்டு தவிக்கும் பெண்களின் வலியை மொத்தமாக சுருக்கென வெளிப்படுத்தி உள்ளார் இந்த பெண்.. முகத்தில் பொட்டென அறைந்தது போல இருக்கிறது இந்த பதிவு.. இந்த பெண் பேச பேச முகம் கோபத்தில் கொப்பளிக்கிறது.. கண்கள் கலங்குகின்றன.. ஆனால் அவ்வளவையும் அடக்கிகொண்டு பேசுகிறார்.. நாளை கடையை திறந்தால் குடிப்பதற்காக பணம் கேட்டு பிராண்டுவார்களா இந்த கணவர்கள்.. என்னென்ன சண்டையெல்லாம் வருமோ என்ற அச்சம் அவரது முகத்தில் தெரிகிறது.

குடித்துவிட்டு பிறகு செய்யும் ரகளையும், அலப்பறையும், அதையொட்டி நடக்க போகும் வன்முறைகளையும் நினைத்தாலே பதறுகிறது. தமிழக அரசு இந்த அறிவிப்பினை திரும்ப பெற்று மக்களுக்காகதான் அரசாங்கம் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும், இந்த 40 நாட்களாக திருந்தியுள்ள குடிமகன்களின் அர்ப்பணிப்புக்கும் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

Related posts

Leave a Comment