சிவப்பு மண்டலமான சென்னைக்கு பிறக்குது விடிவு; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட, சென்னை மாநகருக்கு விடிவு பிறக்கும் விதத்தில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொற்று தடுப்பு பணிக்கு என, பொறுப்பு அதிகாரியாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், சென்னையில் தொற்று பரவலை தடுக்க, ஒவ்வொரு மண்டலத்துக்கும், தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில், சென்னை, முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களில், நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் அதிகரித்தபடி உள்ளது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இரட்டை இலக்கத்தில் இருந்து, மூன்று இலக்கத்திற்கு மாறியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கையும், அதிகரித்தபடி உள்ளது.

நேற்று வரை, சென்னையில் மட்டும், 1,082 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சென்னையில் நோய் பரவலை தடுக்க, அரசு போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, மண்டல அளவில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள, ஆறு மண்டலங்களில், கூடுதலாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி உயர் அலுவலர் அடங்கிய, களப்பணி குழு அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற மண்டலங்களில், மூன்று மண்டலத்திற்கு, ஒரு களப்பணி குழு அமைக்கப்பட்டது.

அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து, கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரியாக, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள, ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, சென்னை மாநகராட்சி கமிஷனராக, சிறப்பாக செயல்பட்டவர்; அனைத்து வார்டுகளும் அத்துபடி. மேலும், சுகாதாரத் துறை செயலராக இருந்தபோது, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவியபோது, சித்த மருத்துவர்களுடன் இணைந்து, நோய் பரவலை கட்டுப்படுத்தினார்.

கடந்த, 2004ல் சுனாமி தாக்கியபோது, நாகை கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனின் பணி, மிகச் சிறப்பாக அமைந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இவரைப் பாராட்டினார். பேரிடர் காலங்களிலும் சிறப்பாக பணியாற்றக் கூடிய இவரை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்துள்ளதால், சென்னை மக்களிடையே நம்பிக்கை பிறந்துள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பணியில், அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க, போலீஸ் அதிகாரிகளும், தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டலத்திற்கு, கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால்; கிழக்கு மண்டலத்திற்கு, கூடுதல் டி.ஜி.பி., ஆபாஷ்குமார்; தென் மண்டலத்திற்கு, கூடுதல் டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி; மேற்கு மண்டலத்திற்கு, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார்சிங்; சென்னை புறநகர் பகுதிக்கு, டி.ஐ.ஜி., பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, தலைமை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Related posts

Leave a Comment