புதிய மருந்து கண்டுபிடிப்பு ஒழுங்குமுறையில் மாற்றம் வேண்டும்! பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: ‘புதிய மருந்துகள் மற்றும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் விஷயத்தில், நம் நாட்டில் பின்பற்றப்படும் ஒழுங்குமுறைகள், பழமையானதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்நிலை, போர்க்கால அடிப்படையில், உடனடியாக மாற வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

புதிய நோய்களுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிப் பணிகளில், அமெரிக்கா போன்ற நாடுகள் ஈடுபடும் போது, அந்த புதிய மருந்துகளை, மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான ஒப்புதல்களை பெற, அந்நாடுகளில், மிக சுலப மான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதுவே, இந்தியா போன்ற நாடுகளில், புதிய மருந்துகளை, எலிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யவே, பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக, சில ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

குறைபாடுகள்:

உதாரணத்திற்கு, ‘கொரோனா’ தொற்றை கட்டுப்படுத்த, ‘ரெம்டிசிவிர்’ போன்ற மருந்துகள் நல்ல பலன்களை தருகையில், அந்த மருந்தை, அமெரிக்காவில் இருந்து, இந்தியா கொண்டு வர, அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு, இந்திய மருந்து ஒழுங்குமுறையில் உள்ள குறைபாடுகளே காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில், நேற்று முன் தினம் கூட்டம் ஒன்று நடந்தது. இதில், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், பிரதமரின் ஆலோசகர் அமர்ஜீத் சின்ஹா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் பல்ராம் பார்கவா, மத்திய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுதன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா வைரசை ஒழிக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு துறையினரும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்படுவது வரவேற்கதக்கது. ஆனால், இந்த விஷயத்தில், கவலை அளிக்க கூடிய அம்சமும் உள்ளது. அதாவது, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால், நம் அதிகாரவர்க்கமும், நடைமுறைகளும், அதற்கு சாதகமாக இல்லை.

ஒப்புதல்கள்:

புதிய மருந்து கண்டுபிடிப்புகளின் போது, சில அடிப்படை பரிசோதனைகளுக்கான ஒப்புதல்கள் விரைவாக வழங்கப்படுவதில்லை. அடிப்படையில், நம் மருந்து ஒழுங்குமுறையில் பின்பற்றப்படும் நடைமுறைகள், பழமையானதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளன. இது போன்ற தாமதங்கள், போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட வேண்டும். புதிய மருந்துகள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு, உயர் தரத்தில் தயாரிக்கப்பட்டால் மட்டும் போதாது. அவை விரைவாகவும் மக்களை சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில முக்கிய மருந்துகளை, அதிக அளவில் கையிருப்பு வைத்துக் கொள்ளுமாறு, அனைத்திந்திய மருந்து விற்பனையாளர்கள் அமைப்புக்கு, மத்திய சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும், 55 மருந்துகள் மற்றும் பல்வேறு பொதுவான நோய்களுக்கு பயன்படும், 96 மருந்துகளின் பட்டியலை, அனைத்திந்திய மருந்து விற்பனையாளர்கள் அமைப்புக்கு, மத்திய சுகாதாரத்துறை அனுப்பி உள்ளது.


மருத்துவப் பணியாளர்கள் 548 பேருக்கு தொற்று!

நாடு முழுதும், டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் உள்ளிட்ட, 548 மருந்துவ பணியாளர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக, மத்திய அரசு தெரிவிக்கிறது. இவர்களுக்கு, எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்ற விபரம், குறிப்பிடப்படவில்லை. மேலும், களப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நோயாளி அறை தம்பிகள், ஆய்வக உதவியாளர்கள், சமையல்காரர்கள், செக்யூரிட்டிகள் உள்ளிட்டவர்கள், இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

Related posts

Leave a Comment