மதுக்கடை திறப்பு யாருக்காக: கமல்

சென்னை: ‘ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எதன் அடிப்படையில், மதுக் கடைகளை திறக்க, அரசு முடிவு செய்கிறது’ என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே, மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு, ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில், மதுக் கடைகளை திறக்க, அரசு முடிவு செய்கிறது?

டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானத்தை நம்பி, கடையை திறக்கின்றனரா அல்லது ஆளும் மற்றும் முந்தைய கட்சியினரின், சாராய ஆலைகளில் விற்பனை குறைந்ததால் திறக்கின்றனரா? கடந்த, 40 நாட்களுக்கு மேலாக, வருமானமின்றி தவிக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த, இந்த அரசுக்கு திறனில்லை. ‘மதுவிலக்கு கொண்டு வருவோம்’ என சத்தியம் செய்து, இந்த அரசு, ஆட்சிக்கு வந்தது.

யாருடைய வழிகாட்டுதலில், ஆட்சி நடக்கிறது என சொல்கின்றனரோ, அவர், 500 மதுக் கடைகளை மூடி, தன் பதவிக் காலத்தை, 3வது முறையாக துவக்கினார் என்பதை, நினைவில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment