மாநில முதல்வர்களுக்கு அதிகாரம்: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

புதுடில்லி: ”எல்லா அதிகாரத்தையும் பிரதமர் அலுவலகத்திலேயே குவித்து வைத்திருந்தால், கொரோனா வைரசை ஒழிக்க முடியாது. மாநில முதல்வர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி, அவர்களுக்கான அதிகாரத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும்,” என, காங்., – எம்.பி., ராகுல் கூறினார்.

நம்பிக்கை:

கொரோனா வைரஸ் பிரச்னை குறித்து, காங்., – எம்.பி., ராகுல் கூறியதாவது: கொரோனா வைரசால், நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த, 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.

எல்லா அதிகாரத்தையும் பிரதமர் அலுவலகத்தில் குவித்து வைத்திருந்தால், பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. வைரஸ் ஒழிப்பில், நாம் தோற்று விடுவோம். அனைத்து மாநில முதல்வர்களுடன், அவ்வப்போது ஆலோசிக்க வேண்டும். வைரஸ் பாதிப்பை எவ்வாறு தடுக்கலாம், பொருளாதாரத்தை சீரமைக்க என்ன நடவடிக்கையை எடுக்கலாம் என, முதல்வர்களிடம், பிரதமர் ஆலோசிக்க வேண்டும்.

முதல்வர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். முதல்வர்களிடம் பேசும்போது, முதலாளி போல் நடந்து கொள்ளாமல், சக ஊழியராக நினைத்து பேச வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் மோதல் போக்கை பின்பற்ற வேண்டாம்.

ஊரடங்கை அறிவிப்பது, தளர்த்துவது என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, ஒதுங்கி இருக்கக் கூடாது. அனைத்து மாநில முதல்வர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்டு, அதன்படி செயல்பட வேண்டும். வரும், 17க்குப் பின், ஊரடங்கு தொடருமா அல்லது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மோசமான நிலை:

ஊரடங்கு தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும், எந்தெந்த தொழில்கள் இயங்கலாம் என்ற விபரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கொரோனாவாலும், ஊரடங்காலும் ஏழைகள் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. அவர்களது கைகளில் பணத்தை வழங்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மீண்டும் செயல்பட, நிவாரண திட்டங்களும், சலுகைகளும் அவசியம். இது குறித்து மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில், தொழில் துறை உடனடியாக செயல்பட விட்டால், பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் செல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.


உண்மை தெரியாமல் பேசுவதா?

கொரோனா வைரஸ் பிரச்னையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தெரியாமல், ராகுல் பேட்டி கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. அனைத்து மாநில முதல்வர்கள், மருத்துவ நிபுணர்களுடனும், பிரதமர் அவ்வப்போது ஆலோசித்து தான், நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரதமர் எடுத்த நடவடிக்கைகளை பொருளாதார நிபுணர்களே பாராட்டுகின்றனர். மோடியின் தலைமையின் கீழ், கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டிய நேரமிது என்பதை, ராகுல் உணர வேண்டும்.

Related posts

Leave a Comment